பாதுகாப்பு சார்ந்த செலவினங்கள் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கக்கூடும்: பிரதமர்

அபாயமிகுந்த உலகச் சூழல் எதிரொலி:

பாதுகாப்பு சார்ந்த செலவினங்கள் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கக்கூடும்: பிரதமர்

2 mins read
8f9b8124-75e7-429b-88e7-5905a35e7f76
அச்சுறுத்தல் மிகுந்த சூழல்களிலிருந்து சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திட நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புச் செலவினங்கள், வரும் ஆண்டுகளில் உயரும் என்று வரவுசெலவுத் திட்ட உரை 2026ல் அறிவித்துள்ளார் பிரதமர் லாரன்ஸ் வோங். - கோப்புப் படம்: தற்காப்பு அமைச்சு

அச்சுறுத்தல் மிகுந்த சூழல்களிலிருந்து சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திட நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புச் செலவினங்கள், வரும் ஆண்டுகளில் உயரும் என்று அறிவித்துள்ளார் பிரதமர் லாரன்ஸ் வோங்.

2026ஆம் ஆண்டிற்கான நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பிரதமர் வோங், உலகம் இடர்களில்லாமல் இருந்ததில்லை; எனினும் அண்மையக் காலங்களில் உலகம் அதிக ஆபத்து மிகுந்ததாக மாறியுள்ளது என்று அக்கறை தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டில் மட்டும் உலகளாவிய வகையில் அரசாங்கத்தை பாதித்த 61 போராட்டங்கள் நிகழ்ந்ததைக் காணமுடிந்ததைச் சுட்டிய பிரதமர், இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நிகழ்ந்த ஆக அதிகளவிலான போராட்டம் என்றார்.

‘‘இத்தகைய மோதல்கள் உலகின் ஏதோ ஓர் மூலையில் நிகழவில்லை. ஆசியான் உறுப்பு நாடுகளுக்கிடையேயும் அத்தகைய மோதல்களைக் காண நேர்ந்தது,’’ என்று தெரிவித்த பிரதமர் தொடர்ந்து பேசினார்.

‘‘தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட நாள்களாக நீடித்து வரும் எல்லை மோதல் தொடர்பிலான ராணுவ நடவடிக்கை, போர் விமானத் தாக்குதல் வரை சென்றது. பொதுமக்கள் காயமுற்றனர்.

‘‘பலர் வீடுகளை விட்டு வேறு இடத்திற்கு புலம்பெயர்ந்தனர். உயிரிழப்பும் நேரிட்டது. இந்த செயல்கள் எல்லாம் மிகுந்த கலக்கத்தைத் தருவதாக அமைந்தது,’’ என்று உரையின்போது குறிப்பிட்டார் திரு வோங்.

பேரிடரைச் சந்திக்க நேர்ந்தால் சிங்கப்பூருக்கு உதவ யாரும் வரமாட்டார்கள் என்பது வரலாறு கற்றுத்தந்த கடினமான பாடம் என்ற பிரதமர், அவ்வகையில் பாதுகாப்புச் சவால்களைச் சந்திக்க கவனமுடன் ஆயத்தமாவது அவசியம் என்று வலியுறுத்தினார்.

‘‘மின்னிலக்கத் தாக்குதல்களும் தொடர்கின்றன. அவை இணையப் பாதுகாப்பை சீர்குலைத்து மோசடியாக விரிவடைந்துள்ளது.

‘‘போர்க்களம் என்றில்லாமல், ஆளில்லா வானூர்திகள் உள்பட தாக்குதல்கள் பல்வேறு வடிவங்களைக் கண்டுவருவதாக குறிப்பிட்ட பிரதமர், அவ்வகையில்  சிங்கப்பூரின் தற்காப்புக் கட்டமைப்புகளில் அதிக அளவில் முதலீடு செய்வதும், எல்லா நிலையிலும் நமது பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம்,’’ என்று வலியுறுத்தினார்.

இதனைக் கருத்தில்கொள்கையில், சிங்கப்பூரை ஆபத்தான சூழல்களிலிருந்து காத்து, பாதுகாப்பாகத் திகழச் செய்ய, தற்காப்பு சார்ந்த  நடவடிக்கைகளில் நீடித்த நிலைத்தன்மை வாய்ந்த முதலீடுகள் முக்கியம் என்றார் திரு வோங்.

இதன் அடிப்படையில் தற்காப்பு சார்ந்த செலவினங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று விழுக்காடாக இருப்பதற்கு இலக்கு கொண்டுள்ளதாகவும், எனினும் தேவை ஏற்பட்டால், தேசத்தைப் பாதுகாக்க கூடுதல் நிதி செலவிடப்படும் என்றும் உறுதி கூறினார் நிதி அமைச்சருமான திரு வோங்.

குறிப்புச் சொற்கள்