சிங்கப்பூரின் வைர விழா அல்லது எஸ்ஜி60ஐ கொண்டாடும் வேளையில் அதையொட்டி ஆர்வமூட்டும் ஏராளமான நிகழ்ச்சிகள், நடவடிக்கைகளுக்கு சிங்கப்பூர் பூமலை ஏற்பாடு செய்துள்ளது.
ஜூலை 19ஆம் தேதி வருடாந்தர மரபுடைமை விழாவுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. இயற்கையால் சூழப்பட்ட நகரம் என்ற சிங்கப்பூரின் கண்ணோட்டத்துக்கு ஏற்ப சிங்கப்பூர் பூமலை ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் சிறப்புக் கண்காட்சி, சிறப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று மார்ச் 27ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தேசிய பூங்காக் கழகம் தெரிவித்தது.
சிங்கப்பூரின் ஒரே வெப்பமண்டல தாவரவியல் பூங்காவான சிங்கப்பூர் பூமலை, யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தளமாக அங்கீகரிக்கப்பட்டு இவ்வாண்டு 10வது ஆண்டு நிறைவு கொண்டாடப்படுகிறது.
மேலும், சிங்கப்பூர் ஹெர்பேரியம் மற்றும் தோட்டங்களின் தாவரவியல் மற்றும் தோட்டக்கலை நூலகத்தின் 150வது ஆண்டு நிறைவும் கொண்டாடப்படுகிறது. இது, 1875ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது மலாயாவில் முதன்முதலில் நிறுவப்பட்ட தாவரவியல் நூலகமாகும். இந்த நிலையில் தேசிய ஆர்க்கிட் தோட்டத்தின் 30வது ஆண்டு விழாவையும் சேர்த்து ஒட்டுமொத்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சிங்கப்பூர் தோட்ட விழாவின் ஆர்க்கிட் கண்காட்சி மீண்டும் திரும்புகிறது.
ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட தாவரவியல் தொகுப்புகளின் மின்னிலக்கத் திட்டமான காட்சிக் கூடத்தை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு உள்ளிட்டவை கொண்டாட்டத்தின் முக்கிய அம்சங்களில் அடங்கும். இந்தத் திட்டத்தில் 800,000 தாவர மாதிரிகள் அடங்கிய தரவு உருவாக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், தீபகற்ப மலேசியா மற்றும் தென்கிழக்கு மற்றும் வட்டாரத்தின் ஆகப்பெரிய இடங்களில் ஒன்றான தெற்காசியா உள்ளிட்ட இடங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட தாவர மற்றும் பூஞ்சை மாதிரிகளின் சேகரிப்பு, நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட களஞ்சியம் ஆகியவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
2027ஆம் ஆண்டில் மின்னிலக்கத் திட்டம் முழுமை அடையும்போது, இந்தத் தரவுகள் தென்கிழக்கு ஆசியாவில் இந்நாள் வரை சேகரிக்கப்பட்டதில் மிகப்பெரியதாக இருக்கும் என்று கழகம் மேலும் கூறியது.
இவ்வாண்டின் பிற நடவடிக்கைகளில் சிங்கப்பூர் பூமலையின் மரபுடைமைப் பாதையோரம் அமைக்கப்படும் தபால் தலைக் காட்சிகள், ஜூலை மாதத்தில் வார இறுதிச் சந்தை மற்றும் தாவர வாழ்க்கை குறித்த கண்காட்சி ஆகியவை அடங்கும்.