அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்ட சிங்கப்பூர், பிரிட்டன்

அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்ட சிங்கப்பூர், பிரிட்டன்

2 mins read
f90f6d31-1747-4d63-927a-3ca67b35b88f
அணுசக்திப் பாதுகாப்பில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் சிங்கப்பூரில் அணுசக்தியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் இந்த இருதரப்புக் கூட்டு முயற்சி உதவும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய சுற்றுப்புற வாரியம், பிரிட்டனின் அணுசக்தி ஒழுங்குமுறை அலுவலகத்துடன் தகவல் மற்றும் நிபுணத்துவப் பரிமாற்றத்துக்கான உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

சிறிய அளவிலான அணு உலைகள் தொடர்பான அணுசக்திப் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் அறிவியல், தொழில்நுட்ப ஊழியர்களுக்கான பயிற்சி ஆகியவற்றை இந்த உடன்பாடு உள்ளடக்கியுள்ளது.

பிரிட்டிஷ் அணுசக்தி ஒழுங்குமுறை அலுவலகம், 30க்கும் மேற்பட்ட அணுசக்தி நிலையங்களை ஒழுங்குபடுத்தும் உலகின் முன்னணிக் கண்காணிப்பு அமைப்புகளில் ஒன்றாகும்.

“இந்த உடன்பாடு கதிரியக்கப் பாதுகாப்பு, அணுசக்திப் பாதுகாப்பு, மதிப்பீடு ஆகியவற்றில் சிங்கப்பூரின் திறன்களை வலுப்படுத்தும்,” என்று தேசிய சுற்றுப்புற வாரியத்தின் வானிலை ஆய்வுச் சேவை மற்றும் கதிரியக்கப் பாதுகாப்புப் பிரிவின் துணைத் தலைமை நிர்வாகி கோ லினா தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் அணுசக்தி ஒழுங்குமுறை அலுவலகத்தின் புதிய அணு உலைகள் முறைப்படுத்தல் பிரிவின் இயக்குநர் பால் டிக்சுடன் இணைந்து அவர் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.

“பிரிட்டனின் அணுசக்தி ஒழுங்குமுறை அலுவலகம் போன்ற நன்கு நிறுவப்பட்ட கண்காணிப்பு அமைப்புகளுடனான பங்காளித்துவம் மூலம், புதிய அணு உலை தொழில்நுட்பங்களைப் புரிந்துகொள்வதற்கான தனது தொழில்நுட்ப நிபுணத்துவத்தை தேசிய சுற்றுப்புற வாரியம் வலுப்படுத்திக்கொள்ளும். அதோடு, அணுசக்திப் பாதுகாப்பைத் தீவிரமாக மதிப்பிடுவதற்குத் தேவையான நிறுவனக் கட்டமைப்புகளையும் இது வளர்க்கும்,” என்றும் திருவாட்டி கோ குறிப்பிட்டுள்ளார்

வழக்கமான அணு உலைகளுடன் ஒப்பிடுகையில், சிறிய அளவிலான அணு உலைகள் குறைந்த ஆற்றல் திறனும் மேம்பட்ட பாதுகாப்புத் தரநிலைகளும் கொண்டவை. மேலும், இவற்றுக்கு மிகக் குறைந்த அளவு பாதுகாப்பு இடைவெளி பகுதியே தேவைப்படுவதால், சிங்கப்பூர் போன்ற சிறிய நிலப் பரப்பளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளுக்கு இவை மிகவும் பொருத்தமானதாகக் கருதப்படுகின்றன.

சிங்கப்பூர் அணுசக்தியைப் பயன்படுத்துவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இருப்பினும், அணுசக்தி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து முறையான முடிவை எடுப்பதற்கான தகுதிநிலை, நிறுவனக் கட்டமைப்பு மற்றும் சட்டதிட்டங்கள் சிங்கப்பூரிடம் உள்ளனவா என்பதை உறுதி செய்ய, 2027ஆம் ஆண்டில் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் மூலமாகச் சிங்கப்பூர் ஒட்டுமொத்த மறுஆய்வுக்கு உட்படவுள்ளது. இதற்கிடையே, ஃபின்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆசியான் நாடுகளின் கண்காணிப்பு அமைப்புகளுடனும் இணைந்து சிங்கப்பூர் தனது தொழில்நுட்பத் திறனைத் தொடர்ந்து வளர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்