மார்ச் 2ஆம் தேதி தொடங்கும் ரமலான் மாதத்தை முன்னிட்டு சிங்கப்பூர் பெளத்த விடுதி அமைப்பு (Singapore Buddhist Lodge), நன்கொடையாகத் திரட்டப்பட்ட 30 டன் அரிசியை ப’ஆல்வி பள்ளிவாசலுக்கு வழங்கியுள்ளது.
இந்த அரிசி, ஆலயங்கள், தேவாலயங்கள் என மற்ற பல வழிபாட்டுத் தலங்களுக்கும் விநியோகம் செய்யப்படும். 25 கிலோ அரிசிப் பைகளைத் தொண்டூழியர்கள் 3 கிலோ, 5 கிலோ பைகளாகப் பிரித்து வழங்குவர் என்று பள்ளிவாசல் கூறியது.
அமைப்பு அந்தப் பள்ளிவாசலுக்கு அரிசி நன்கொடை செய்வது இது 15வது முறையாகும். இம்முறை ஐந்தாவது ஆண்டாக அது 30 டன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்த தனிநபர்களும் அமைப்புகளும் அரிசியை நன்கொடையாக வழங்கியது இத்திட்டத்தின் சிறப்பாகும்.
“ரமலான் மாதத்தின்போது கஞ்சி சமைக்கப்படுவதால் அரிசி அத்தியாவசியமாக உள்ளது. பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்கள் இந்த உணவுப் பொட்டலங்களைப் பெறுகின்றனர்,” என்று ப’ஆல்வி பள்ளிவாசலின் தலைமை இமாம் ஹபிப் ஹசான் அல்-அத்தாஸ் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
அரிசி மட்டுமன்றி, சவூதி அரேபியாவிலிருந்து 40 டன் பேரீச்சம்பழங்களும் இங்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார் திரு ஹபிப்.
சமயப் பாகுபாடின்றி அனைவரும் இந்த அரிசியைப் பெற்றுக்கொள்ளும்படி ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் தலைமை நிர்வாகி ஹாஜா மைதீன் ஊக்குவித்தார்.
தங்கள் புரவலர்கள் வைத்த நம்பிக்கையாலும் முயற்சிகளாலும் இத்திட்டம் சாத்தியமானதாகச் சிங்கப்பூர் பெளத்த விடுதி அமைப்பின் துணை கெளரவச் செயலாளர் டெங் செங் டுய் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிகழ்ச்சியைச் சிறப்பித்த தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்ற மேயர் ஃபாமி அலிமான், இந்த அரிசி விநியோகத் திட்டம் சமூகத்திலுள்ள அனைவரையும் இணைப்பதாகப் பாராட்டினார்.
“ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து, சமூகத்தினரைத் தொடர்புகொண்டு இணக்கம் பாராட்டுவதுதான் ரமலான் மாதத்தின்போது நாம் செய்யவேண்டியது,” என்று அவர் கூறினார்.

