தொடர்ந்து நாலாவது காலாண்டாக வர்த்தக நம்பிக்கை அதிகரிப்பு

2 mins read
e7bfe24e-6abc-4591-9661-b90e10eb6815
கட்டுமானம், போக்குவரத்து, நிதி ஆகிய துறைகள் ஆக அதிக நம்பிக்கை தருவனவாக அமைந்திருந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உள்ளூர் வர்த்தகச் சூழல் தொடர்ந்து நாலாவது காலாண்டாக மேம்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வர்த்தகக் கடன் பிரிவு (எஸ்சிசிபி), ஜூன் 10ஆம் தேதி தெரிவித்துள்ளது.

மூன்றாம் காலாண்டுக்கான வர்த்தக நம்பிக்கைக் குறியீடு சற்றே அதிகரித்து 4.94 விழுக்காட்டுப் புள்ளிகளாகப் பதிவானதாகக் கூறப்பட்டது. இரண்டாம் காலாண்டில் அக்குறியீடு 4.82 விழுக்காட்டுப் புள்ளிகளாகப் பதிவானது.

வர்த்தகக் கடன் பிரிவு ஒவ்வொரு காலாண்டிலும் நடத்தும் கருத்தாய்வின் அடிப்படையில் வர்த்தக நம்பிக்கைக் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தக் கருத்தாய்வில், முக்கியத் தொழில்துறைகளைச் சேர்ந்த வர்த்தக உரிமையாளர்கள், மூத்த நிர்வாகிகள் என 200 பேர் பங்கேற்பர்.

ஆண்டு அடிப்படையிலும், சென்ற ஆண்டின் (2023) மூன்றாம் காலாண்டில் பதிவான ‘3.98 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகம்’ என்ற வர்த்தக நம்பிக்கைக் குறியீட்டைவிட இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான குறியீடு அதிகம்.

கட்டுமானம், போக்குவரத்து, நிதி ஆகிய துறைகளில் வர்த்தக நம்பிக்கை ஆக அதிகமாகப் பதிவானதாகவும் எஸ்சிசிபி தெரிவித்தது.

உற்பத்தித் துறையில் வர்த்தக நம்பிக்கை குறைவாகப் பதிவானது. இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டுக்கான உற்பத்தித் துறையின் விற்பனை அளவு, நிகர லாபம் இரண்டுமே 3.85 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைவாகப் பதிவாயின. இரண்டாம் காலாண்டில் அவை பூஜ்ஜியம் விழுக்காட்டுப் புள்ளிகளாகப் பதிவாகியிருந்தன.

மொத்த விற்பனைத் துறையிலும் சேவைத் துறையிலும் வர்த்தக நம்பிக்கை சற்றே மேம்பட்டுள்ளது.

உள்ளூர் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான வர்த்தக நம்பிக்கை மேம்பட்டுள்ளதாக எஸ்சிசிபி குறிப்பிட்டது.

சென்ற காலாண்டைப்போன்றே விற்பனை அளவு, பொருள்களின் விலை, புதிய கொள்முதல் பட்டியல்கள், வேலைவாய்ப்பு நிலவரம் ஆகிய நான்கு அம்சங்களில் வளர்ச்சி பதிவானதாகவும் பொருள்களின் கையிருப்புப் பட்டியலில் காணப்பட்ட சரிவு சற்றே சீரானதாகவும் அது கூறியது.

காலாண்டு அடிப்படையில், மதிப்பீடு செய்யப்படும் ஆறு அம்சங்களில் மூன்றான விற்பனை அளவு, நிகர லாபம், வேலைவாய்ப்பு நிலவரம் ஆகியவை தொடர்பில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் பொருள்களின் விலை, புதிய கொள்முதல் பட்டியல்கள் ஆகியவை மிதமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்