தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகளவில் முடங்கிய இணையச் சேவை; சிங்கப்பூரில் பயணிகள் தத்தளிப்பு

2 mins read
f3ea38e4-16fe-4543-a314-0e8c83e9291d
சாங்கி விமான நிலையம் முனையம் 1ல் தொழில்நுட்பக் கோளாறு எற்பட்டதால் ஸ்கூட் போன்ற விமான நிறுவனங்கள் தானியக்க பயண அனுமதி முறையைக் கைவிட்டு, நேரடியாக ஊழியர்கள் தலையிட்டு அனுமதி வழங்கும் முறைக்கு மாறின. - படம்: இபிஏ
multi-img1 of 2

பெரிய அளவிலான தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பு காரணமாக இணையச் சேவை முடங்கியதில் சிங்கப்பூர் உட்பட உலகெங்கும் ஏராளமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.

அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் விமான நிலையங்கள், ஊடக நிறுவனங்கள், பேரங்காடிகள் மற்றும் வங்கிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகிவந்தன.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், தமிழ் முரசு ஊடகங்களும் இந்தப் பாதிப்பிலிருந்து தப்பவில்லை.

மைக்ரோசாஃப்ட் 365 சேவை செயலிழப்பு தொடர்பில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி நிலவரப்படி, சிங்கப்பூர் பயனர்களிடமிருந்து 150க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக downdetecteor.com இணையத்தளம் காட்டியது.

விண்டோஸ் மென்பொருள் மூலம் இயங்கும் கருவிகளில் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்த முடியவில்லை எனப் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

‘தங்கள் கணினியில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் அதனை அணைத்துவிட்டு இயக்கும்படி’ நீலத்திரையில் தோன்றுவதாகப் பயனர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

மைக்ரோசாஃப்ட் 365 செயலிகளில் பலவற்றையும் அவற்றின் சேவையையும் பயனர்கள் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆராய்ந்து வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது சமூக ஊடகப் பக்கம் ஒன்றின்மூலம் உறுதிப்படுத்தி இருப்பதாக ஆஸ்திரேலியச் செய்தி நிறுவனமான ‘ஸ்கை நியூஸ்’ தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, குறைபாடுள்ள மென்பொருள் ஒன்றை தனது நிறுவனம் மேம்படுத்தியதன் காரணமாக மாபெரும் தொழில்நுட்பத் தடங்கல் எற்பட்டதாகவும் தானும் அதனால் பாதிக்கப்பட்டதாகவும் ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ என்னும் இணையப் பாதுகாப்பு மென்பொருள் நிறுவனம் கூறியது.

‘ஃபால்கன் சென்சார்’ என்னும் இணையப் பாதுகாப்பு மென்பொருளோடு அந்த சேவைத் தடங்கல் தொடர்புடையது என்றும் அமெரிக்காவின் சிஎன்பிசி செய்தி நிறுவனத்திடம் அந்த நிறுவனம் தெரிவித்தது.

இந்தச் சம்பவத்தில் பாதுகாப்பு அத்துமீறலோ இணைய ஊருவலோ நிகழவில்லை என்று ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ தலைமை நிர்வாக அதிகாரி ஜார்ஜ் கட்ஸ் கூறினார்.

நிலைமையை சீர்செய்ய, மென்பொருள் மேம்பாட்டை நீக்கிவிட்டு பழைய நிலைக்கு அதனைக் கொண்டு வரும் முயற்சியில் ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ ஈடுபட்டு இருப்பதாக சிஎன்பிசி கூறியது.

இந்நிலையில், ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ பாதுகாப்பு மென்பொருள் நிறுவப்பட்ட விண்டோஸ் இயங்குதளக் கணினிகள் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

உலகளவிலான இணையச் சேவை முடக்கத்தால் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஹாங்காங் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலகளாவிய விமானநிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் தத்தளித்தனர்.

சாங்கி விமான நிலையத்தில் பயணச்சீட்டு அனுமதி முகப்புகளில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. தானியக்க அனுமதி முறை செயலிழந்ததால், ஸ்கூட் உள்ளிட்ட ஏராளமான விமான நிறுவனங்கள் ஊழியர்கள் நேரடியாகத் தலையிட்டு அனுமதி வழங்கும் முறைக்கு மாறின.

சிங்கப்பூர் போஸ்ட் நிறுவனமும் கம்ஃபர்ட்டெல்குரோவின் டாக்சி சேவைக்கான ஸிக் செயலியும் இணையச் சேவை முடக்கத்தால் பாதிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்