$72 மில்லியன் பணமோசடி: சிங்கப்பூர் தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு

2 mins read
d8b417a2-d4ac-4211-848c-0934d550f3a1
வெவ்வேறு அடையாளங்களில் தலைமறைவாக இருந்த தம்பதியர், சிங்கப்பூர் அதிகாரிகளிடம் டிசம்பர் 3ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டனர். - படம்: லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு

கிட்டத்தட்ட அமெரிக்க டாலர் 51 மில்லியனுக்கு (S$72 மில்லியன்) மேல் பணமோசடி செய்து 19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்ததாக நம்பப்படும் சிங்கப்பூர் தொழிலதிபர் மீது நம்பிக்கை மோசடி தொடர்பில் டிசம்பர் 4ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.

மத்திய காவல்துறைப் பிரிவிலிருந்து காணொளி இணைப்புவழி 58 வயது இங் டெக் லீயும் அவரின் மனைவி 55 வயது தோர் சுவீ ஹுவாவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

நாட்டைவிட்டு 2005ஆம் ஆண்டு தப்பியோடியதை அடுத்து டிசம்பர் 3ஆம் தேதி இருவரும் ஜோகூர் பாருவில் மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சிக்கினர்.

தம்பதியை மலேசிய அதிகாரிகள் அதே நாளில் சிங்கப்பூரின் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவிடம் (சிபிஐபி) ஒப்படைத்தனர்.

முன்னதாக, ‘சிட்டிராயா இன்டஸ்டிரிஸ்’ எனும் மறுபயனீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தலைவராகவும் இருந்தார் இங்.

மறுபயனீட்டைத் தவிர மின்சாரக் கழிவுகளிலிருந்து விலைமதிப்பற்ற உலோகங்களைக் மீட்டெடுக்கும் பணிகளை நிறுவனம் செய்து வந்தது.

பகுதி மின்கடத்தி ஜாம்பவான்களாகக் கருதப்படும் ‘ஏஎம்டி’, ‘இன்டெல்’, ‘இன்ஃபினியோன்’ ஆகியவை இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருந்தன.

இருப்பினும், மின்சாரக் கழிவுகளை நொறுக்கி அவற்றில் உள்ள விலைமதிப்பற்ற உலோகங்களை மீட்டெப்பதற்குப் பதிலாக, விற்பனை ஆவதற்காக வெளிநாடுகளுக்கு அப்பொருள்களை இங் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 2008ஆம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, தமது சதித்திட்டங்களின்வழி இங் அமெரிக்க டாலர் 51 மில்லியனுக்கும் அதிகமான தொகை, அதாவது அந்தக் காலகட்டத்தில் சுமார் 72 மில்லியன் வெள்ளி பணம் ஈட்டியதாக அறியப்படுகிறது.

இங்கின் மனைவி பெயரில் இருந்தவை உட்பட சுமார் $23 மில்லியன் மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்ய 2011ல் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

சிபிஐபி வழக்கை விசாரிக்கத் தொடங்கியபோது கணவன் மனைவி இருவரும் 2005ல் சிங்கப்பூரை விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க, தம்பதியர் வெவ்வேறு அடையாளங்களில் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இருவரின் மீதான வழக்கு டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்