கரிம வெளியேற்ற இலக்கை எட்டுவதற்கு, வழக்கமாகப் பயன்படுத்தப்படும் விமான எரிபொருளைவிடக் குறைந்தது 40 விழுக்காடு குறைவான கரிம வெளியேற்றத்தைக் கொண்ட நீடித்த நிலைத்தன்மை உடைய விமான எரிபொருளை மட்டுமே சிங்கப்பூர் வாங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (நவம்பர் 5) வெளியிட்ட புதிதாக வகுக்கப்பட்ட விதிகளில் இதுவும் ஒன்று.
பசுமை விமான எரிபொருளைப் பயன்படுத்துவதற்கான நாட்டின் தீவிர முயற்சிகள் உண்மையான கரிம வெளியேற்றக் குறைப்பிற்கு வழிவகுக்கும் என ஆணையத்தின் நீடித்த நிலைத்தன்மைக்கான தலைமை அதிகாரி டேனியல் இங் கூறினார்.
சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை கொண்ட விமான எரிபொருள் நிறுவனமான சாஃப்கோ தனது முதல் ஏலக் குத்தகையை இவ்வாண்டு டிசம்பர் நடுப்பகுதியில் கோரவுள்ளது.
கலப்பு எரிபொருள் எனப்படும் பசுமை எரிபொருளைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படும் எரிபொருளின் விநியோகம் 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் சாஃப்கோ நிறுவனம் தொடங்கும்.
சாங்கி, சிலேத்தார் விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் விமான எரிபொருளில் 2027ஆம் ஆண்டில் ஒரு விழுக்காடும் 2030ஆம் ஆண்டுக்குள் மூன்று முதல் ஐந்து விழுக்காடும் நீடித்த நிலைத்தன்மை கொண்ட எரிபொருளாக இருக்கச் சிங்கப்பூர் இலக்கு நிர்ணயித்துள்ளது.
விமான நிறுவனங்கள் இதனைப் பயன்படுத்துவதற்கு ஆதரவளிக்க, சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகளுக்கு 2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பசுமை விமான எரிபொருள் தீர்வை விதிக்கப்படும்.
ஏலக் குத்தகையில் விலை சாதகமாக அமைந்தால், சிங்கப்பூர் தனது ஒரு விழுக்காடு இலக்கைத் தாண்டக்கூடும் என சாஃப்கோ தலைமை நிர்வாக அதிகாரி டான் சியாவ் ஹுய் தெரிவித்தார்.
