உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இருதரப்பு அரிசி வணிகத்தை மேம்படுத்தவும் நாடுகளுக்கு இடையே தேவையற்ற வணிக கட்டுப்பாடுகளைத் தவிர்க்கவும் சிங்கப்பூரும் கம்போடியாவும் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒத்துழைப்புப் புரிந்துணர்வு உடன்பாடு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) கையெழுத்தானது.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திருவாட்டி கிரேஸ் ஃபூவும் தாய்லாந்து வணிக அமைச்சர் சாம் நிமுலும் அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
அதன்படி, சிங்கப்பூர் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, இருநாடுகளும் ஒப்புக்கொண்ட விதிமுறைகளின் அடிப்படையில் அரிசி விற்பனைக்குக் கம்போடிய அரசாங்கம் ஆதரவு அளிக்கும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“தொடர்ந்து நீடிக்கும் புவிசார் அரசியல் பதற்றங்கள் உலகளாவிய உணவு விநியோகத் தடைகளுக்கான அபாயத்தை அதிகரிக்கின்றன. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பயனளிப்பதோடு, இருதரப்பு உணவு வணிகத்தையும் உணவுப் பாதுகாப்பையும் வலுப்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நெருக்கமான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது,” என்று திருவாட்டி ஃபூ கூறினார்.
மத்திய கிழக்குச் சண்டை காரணமாக சில நாடுகளிலிருந்து உணவுப்பொருள்கள் கிடைக்காமல் போகலாம் என்றும் மாற்று உணவுகளைத் தேர்ந்தெடுப்பதில் சிங்கப்பூரர்கள் நீக்குப்போக்குடன் இருக்க வேண்டும் என்றும் சில நாள்களுக்குமுன் நாடாளுமன்றத்தில் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்திருந்தார்.
அண்மை மாதங்களில் அரசி வணிகம் தொடர்பில் சிங்கப்பூர் செய்துகொண்டுள்ள மூன்றாவது உடன்பாடு இது. முன்னதாக, 2025 பிற்பகுதியில் வியட்னாமுடனும் தாய்லாந்துடனும் இத்தகைய உடன்பாடு எட்டப்பட்டது.
சிங்கப்பூர் தனது உணவுத் தேவைகளுக்கு 90 விழுக்காட்டிற்கும் மேல் இறக்குமதிகளையே சார்ந்திருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், நிலையான உணவுப்பொருள் விநியோகத்திற்காகவும் இடையூறுகளுக்கு இடையே வணிகத்தை வலுப்படுத்தவும் ஏதுவாக சென்ற ஆண்டிலிருந்து சிங்கப்பூர் பல நாடுகளுடன் உடன்பாடுகளைச் செய்துகொண்டுள்ளது.
“சிங்கப்பூரின் உணவுப்பொருள் விநியோக மீள்திறனை வலுப்படுத்த, ஒத்த கருத்துடைய நாடுகளுடன், இருதரப்பிற்கும் பயனளிக்கும் உடன்பாடுகளைச் செய்துகொள்வது குறித்து தொடர்ந்து ஆராய்வோம்,” என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு தெரிவித்துள்ளது.

