அமெரிக்க அதிபர் உலகமயமாக்கலுக்கு எதிராக முழு அளவில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் உள்ளதாக பகுப்பாய்வாளர்களில் சிலர் கருதுகின்றனர்.
இவர்களில் ஒருவர் முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லியில் பணிபுரியும் ஆசியப் பொருளியல் நிபுணரான திரு.டெரிக் காம். வளர்ச்சி, அரசியல் நிலைத்தன்மை, ஆளுமைத் தரம் ஆகியவற்றில் சிங்கப்பூர் உயர்ந்து நிற்பதாகக் கூறுகிறார்.
மாறிவரும் உலகப் பொருளியல் சூழலில் அதற்கேற்றவாறு கொள்கைகளை தன்னால் வகுத்துக்கொள்ள இயலும் என்பதை சிங்கப்பூர் நிரூபித்துள்ளதாக இவர் தெரிவிக்கிறார்.
“உலகப் போக்கை சரியாக கணித்து அதன் அடிப்படையில் திறமையாக செயல்படுவதில் சிங்கப்பூர் சிறந்து விளங்குகிறது,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு, வங்கியின் ஆசியான் ஆய்வாளரான திரு.நிக் லாரட் என்பவருடன் இணைந்து வழங்கிய நேர்காணலில் திரு.டெரிக் காம் தெரிவித்துள்ளார்.
இதில், தனது மையத் தொழில் துறைகளை வலுப்படுத்தும் விதமாக சிங்கப்பூர் உற்பத்தித் திறனை உயர்த்த வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றை அவர் சுட்டினார்.

