சவால்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சிங்கப்பூர், வாய்ப்புகளில் கவனம் செலுத்தி தனது பொருளியலை எதிர்பார்ப்பைவிட வேகமாக வளரச் செய்ய முயற்சி எடுக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.
பத்தாண்டு காலத்தில் சிங்கப்பூரின் பொருளியல் ஆண்டுதோறும் இரண்டிலிருந்து மூன்று விழுக்காடு வரை வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த வளர்ச்சி விகிதம், நியூசிலாந்து, சுவீடன், சுவிட்சர்லாந்து போன்ற அதிநவீன, சிறிய பொருளியல்களுடன் ஒப்பிடக்கூடியது என்று அவர் சுட்டினார்.
“எனினும், நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. மாறாக, இலக்கை உயர்த்த வேண்டும். அது, (பணவீக்கத்துக்கு ஏற்றவாறு) நமது மக்களின் சம்பளம் அதிகரிக்க வகைசெய்யும், உலகப் பொருளியல் நிலையற்றிருக்கும் வேளையில் மக்களின் மீள்திறனை வலுப்படுத்தும்,” என்று திரு கான் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) நாடாளம்ன்றத்தில் கூறினார்.
நீண்டகாலத்தில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி விகிதம் இரண்டிலிருந்து மூன்று விழுக்காடாகப் பதிவாவதற்கு முன்பு அடுத்த சில ஆண்டுகளில் எழும் வாய்ப்பக்ளைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு வளர்ச்சி விகிதத்தை அதிகரித்து பொருளியலை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் விளக்கினார்.
எனினும், உலக வர்த்தகச் சூழலும் பொருளியல் சூழலும் மோசமடைவதுடன் உள்ளூர் நிலவரம் சவாலாக இருந்துவரும் வேளையில் பொருளியல் வளர்ச்சியை மேம்படுத்துவது எளிதல்ல என்றும் அவர் சுட்டினார்.
“கடந்த சில மாதங்களாக உலகில் நாம் கண்டுள்ள விவகாரங்கள் கடந்துபோகும் புயலல்ல, மாறியிருக்கும் உலகைக் குறிக்கின்றன. அதிக விரிசல்கள் உள்ள, மதலீடுகளுக்குக் கூடுதல் போட்டி உள்ள உலகாகும். பொருளியல் பாதுகாப்பு, தேசிய அக்கறை ஆகியவை அதிகம் வலியுறுத்தப்படுகின்றன.
“இவை, புதிய சூழலில் சிங்கப்பூரை முன்னெடுத்துச் செல்லப் புதிய திட்டம் தேவை என்பதைக் குறிக்கின்றன,” என்று வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் விவரித்தார்.
அடுத்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூரின் ஊழியர் எண்ணிக்கை ஆண்டுதோறும் ஒரு விழுக்காடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே காலகட்டத்தில் உற்பத்தித்திறன் வளர்ச்சி ஒன்றிலிருந்து இரண்டு விழுக்காட்டுக்குள் பதிவாகும். சில வேளைகளில் உலகப் பொருளியல் மந்தமடைவது உள்ளூரிலும் வளர்ச்சியைப் பாதிக்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
எனினும், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல் போன்றவை உற்பத்தித் திறனை வளர்க்க வாய்ப்புகள் இருக்கும் என்றும் அவர் சொன்னார்.