நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் தேவைப்படும்போதெல்லாம் தச்சு வேலைகளைச் செய்துதரும் கோவிந்தராஜ் முத்தையாவுக்கு ஜூலை மாதத்தில் ஓர் இன்ப அதிர்ச்சி.
சிங்கப்பூருக்கு வருகை புரியவிருக்கும் போப் ஃபிரான்சிஸ் அமர்வதற்கு இரண்டு நாற்காலிகள் செய்து தருமாறு தச்சர் தொழில் செய்துவரும் 43 வயது கோவிந்தராஜுக்கு அழைப்பு வந்தது.
சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்க ஆர்ச்டியோஸ் எனப்படும் சமய அமைப்பொன்று ஜூலை மாத இறுதியில் கோவிந்தராஜுவை அணுகியது.
தாம் ஓர் இந்துவாக இருந்தாலும் சமயத்துக்கும் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறினார் கோவிந்தராஜ்.
“என்னிடம் பேசியபோது தெரிந்த ஒருவரின் பரிந்துரையில் அவர்கள் என்னை அணுகுவதாகக் கூறினார்கள். முதலில் நாற்காலி செய்ய வேண்டுமென்றார்கள். பின்னர் நாற்காலியின் பரிமாணங்களைக் கேட்டபோது அவர்கள் அந்த நாற்காலிக்குப் பல்வேறு நுணுக்கங்கள் தேவைப்படுவதாகச் சொன்னார்கள்.
“அது போப் ஃபிரான்சிசுக்காகத் தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறியபோது நான் திடுக்கிட்டுப் போனேன்,” என்று தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார் கோவிந்தராஜ்.
இரண்டு நாற்காலிகளை முழுக்க முழுக்க தன் கைப்பட அமைக்க அவருக்கு ஆறு வாரங்கள் எடுத்தன.
நாற்காலிகள் செப்டம்பர் 13ஆம் தேதி போப் ஃபிரான்சிஸ் கலந்துகொள்ளவிருக்கும் சமயங்களுக்கு இடையிலான கலந்துரையாடலில் அமர்வதற்குப் பயன்படுத்தப்படும் என்று அறிந்தவுடன் பதற்றம் கலந்த உற்சாகத்தில் மூழ்கினார் கோவிந்தராஜ்.
தொடர்புடைய செய்திகள்
“நான் போப் ஃபிரான்சிஸ் சமயப்பணியில் அமர்ந்ததிலிருந்து அவரைப் பின்பற்றி வருகிறேன். அவர் மிகவும் பணிவானவர். அவரிடம் எனக்குப் பிடித்ததே அவருடைய நற்குணங்கள்தான்,” என்று நெகிழ்ந்தபடிச் சொன்னார் கோவிந்தராஜ்.
தனக்கு வரும் தச்சு வேலைகள் அனைத்தும் மனதுக்கு நெருக்கமாக இருந்தாலும், போப் ஃபிரான்சிசுக்கு அமைத்த நாற்காலிகள் அவரது மனத்தில் தனியிடத்தைப் பிடித்துவிட்டன.
சாதாரண நாற்காலிகளின் வடிவமைப்புப் போல கோவிந்தராஜ் இந்த இரு நாற்காலிகளை அணுகவில்லை.
“நாற்காலிகளை அமைக்க நான் மாறுபட்ட வகையில் வடிவமைப்புகளை யோசித்தேன். பழமை கலந்த நவீன பாணியை நான் தேர்ந்தெடுத்தேன்,” என்றார் அவர்.
பார்ப்பதற்கு எளிய வடிவமைப்பாக இருந்தாலும் அது பிரம்மாண்டமாகத் தோன்ற வேண்டும். சக்கர நாற்காலியைச் சார்ந்திருக்கும் 87 வயதான போப் ஃபிரான்சிஸ், நாற்காலியில் அமரும்போது அவருக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தந்தம் மென் பட்டுத் துணி வகையை பயன்படுத்தினார்.
மேலும், நாற்காலியில் அடங்கியிருக்கும் ஒவ்வொரு வடிவமைப்புக்குப் பின்னாலும் ஒரு கதை உள்ளதாக நம்மிடம் பகிர்ந்தார் கோவிந்தராஜ்.
இளம் வயதில் தமது நெருங்கிய நண்பருடன் நொவீனாவில் அமைந்துள்ள ‘சர்ச் ஆஃப் அல்போன்சஸ்’ தேவாலயத்துக்கு அடிக்கடி சென்றுவந்தார் கோவிந்தராஜ்.
அந்த தேவாலயம் தமக்குப் பல நினைவுகளை அள்ளித் தந்துள்ளதாக சொன்ன கோவிந்தராஜ் தேவாலயத்தின் பழைய வடிவங்களின் தாக்கத்தை நாற்காலிகளில் சேர்த்துள்ளார்.
“எனது நெருங்கிய நண்பர் எப்போதும் பள்ளி முடிந்து என்னை அந்த தேவாலயத்திற்கு அழைத்துச் செல்வார். என்னால் அதை எப்படி மறக்க முடியும். அதன் தாக்கம் கண்டிப்பாக இந்த நாற்காலிகளில் இருக்க வேண்டும்,” என்று உணர்ச்சிபொங்க சொன்னார் கோவிந்தராஜ்.
அது மட்டுமன்றி மற்றொரு நாற்காலியின் அடித்தளம் முன்பு போப் அர்ஜென்டினாவில் வளர்ந்தபோது அவர் அடிக்கடி சென்ற ‘பசிலிக்கா ஆஃப் சான் ஜோசே டி புளோரஸ்’ தேவாலயத்தின் வடிவத்திலிருந்து தழுவப்பட்டது.
அந்த நாற்காலியில் போப் தமது கையை வைக்கும் இடம் ஆங்கில எழுத்தான ‘பி’ வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பப் பெயர் ‘பி’ எழுத்தில் தொடங்குவதால் தாம் அவ்வாறு யோசித்ததாக கோவிந்தராஜ் கூறினார்.
போப் ஃபிரான்சிசை நேரில் காணும் வாய்ப்புக்காக தவமாய் தவமிருக்கும் கோவிந்தராஜ் ஒரு வேளை போப்பைப் பார்க்க நேரிட்டால் அவரிடம் தமிழ்மொழியில் ஒரு பிரார்த்தனையை ஒப்பித்து அதன் அர்த்தத்தைப் புரியவைக்க மிகவும் ஆசைப்படுகிறார்.
நாற்காலியின் சிறிய அளவிலுள்ள உறுபடிவத்தை ஏற்கெனவே தயார் செய்துள்ள அவர் அதை போப்பிடம் அன்பளிப்பாகக் கொடுக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்.
“என்னால் போப்பைப் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. அது நடக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக நடக்கும்,” என்று கூறினார் கோவிந்தராஜ்.
கடந்த ஐந்தாண்டுகளாகத் தச்சர் தொழிலில் ஈடுபட்டுவரும் கோவிந்தராஜூ பெரும்பாலும் வடிவமைப்பது பூஜை மாடங்கள். தமக்கு இத்தகைய வாய்ப்பு கிட்டியிருப்பதை எண்ணி இன்னும் வியப்பில் உள்ளார் கோவிந்தராஜ்.