இத்தாலியில் தங்கள் விடுமுறை இல்லத்தில் தங்கியிருந்த சிங்கப்பூர் ஆடவர், வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தைவானியரான அவரது மனைவியைக் காணவில்லை.
எரிவாயுக் கசிவால் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இத்தாலியின் மொலஸ்ஸானா நகரில் உள்ளூர் நேரப்படி டிசம்பர் 21ஆம் தேதி இரவு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக இல் டிர்ரெனோ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மாண்டவரின் பெயர் சீட்டோ குவோக் மெங் என்றும் அவருக்கு வயது 68 என்றும் கூறப்பட்டது. அவரது மனைவியின் பெயர் காய் என் சாங். அவருக்கு வயது 52.
சில ஆண்டுகளுக்குமுன் அங்கு வீடு ஒன்றை வாங்கிய அத்தம்பதியர் அவ்வீட்டில் கோடைக்கால விடுமுறையைக் கழிப்பது வழக்கம்.
இரவு உணவருந்திவிட்டு அவர்கள் இருவரும் வீடு திரும்பிய சிறிது நேரத்தில் எரிவாயுக் கசிவால் வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அருகிலுள்ள கிராமங்களிலும் அந்த வெடிப்புச் சத்தத்தைக் கேட்க முடிந்ததாகத் தகவல்கள் கூறின.
வீட்டைத் தீ சூழ்ந்த நிலையில் அதன் சுவர்கள் இடிந்து விழுந்தன. தீயணைப்பாளர்கள் 25 பேர், போராடி தீயை அணைத்தனர். டிசம்பர் 22ஆம் தேதி நிலவரப்படி அந்த மாதை இன்னும் காணவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் கூறின.
மேல்விவரங்களுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியுறவு அமைச்சைத் தொடர்புகொண்டுள்ளது.

