உலகச் சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் தடுப்பு, கட்டுப்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு நிலையமாகச் சிங்கப்பூரின் தொற்றுநோய் நிலையம் நியமிக்கப்பட்டுள்ளது.
அது, சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்த உலக அளவில் உருவாக்கப்பட்ட முதல் சிறப்பு நிலையம் என்று தெரிவிக்கப்பட்டது.
நோயாளிகள், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் போன்றோரின் பாதுகாப்பை வலுப்படுத்துவது, தொற்றுகளின் பரவலைக் குறைப்பது, எதிர்காலத் தொற்றுக்கான ஆயத்தங்களை வலுப்படுத்துவது ஆகியவற்றுக்கான முயற்சிகளை புதிய நிலையம் ஊக்குவிப்பதாக சிங்கப்பூர் தொற்றுநோய் அமைப்பு தெரிவித்தது.
தொற்றுநோய்களைச் சமாளிக்க அனைத்துலக ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பை வலுப்படுத்த ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறினார்.
மற்றொரு தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன என்று மேக்ஸ் ஏட்ரியாவில் திங்கட்கிழமை (நவம்பர் 16) நடைபெற்ற தேசிய தொற்றுநோய் தடுப்பு, கட்டுப்பாட்டு சுகாதாரப் பராமரிப்பு மாநாட்டில் திரு ஓங் உரையாற்றினார்.
“நம்மிடம் அறிவியலும் அனைத்துலக ஒத்துழைப்பும் உண்டு. அனைத்துலக ஒத்துழைப்புகள் மூலம் நமது தற்காப்பை வலுப்படுத்திக்கொள்ளலாம்,” என்று அவர் அறிவுறுத்தினார்.
சுகாதாரப் பராமரிப்பு தொடர்புடைய தொற்றுப் பரவலையும் சுகாதாரப் பராமரிப்பு வசதிகளில் உள்ள ஊழியர்களிடமும் நோயாளிகளிடமும் பரவக்கூடிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் தொற்றுநோய் தடுப்பு, கட்டுப்பாட்டு கொள்கைகளும் திட்டங்களும் அவசியம் என்று திரு ஓங் வலியுறுத்தினார்.
தேசிய அளவிலான தொற்றுநோயைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான திறன்களை வலுப்படுத்த சிங்கப்பூர் தொடர்ந்து முதலீடு செய்துவருவதாகச் சொன்ன திரு ஓங், கண்காணிப்புக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, சான்றுகள் சார்ந்த வழிகாட்டிகளை உருவாக்குவது, சுகாதாரக் கட்டமைப்புகள் இடையே நெருக்கமான பங்காளித்துவத்தை ஏற்படுத்துவது ஆகியவை அவற்றுள் அடங்கும் என்றார்.
தொற்றுநோயைத் தடுப்பதிலும் அதை நிர்வகிப்பதிலும் உள்ள தனது அனுபவத்தைச் சிங்கப்பூர் பகிர்ந்துகொண்டுள்ளது.
சிங்கப்பூர் ஒத்துழைப்புத் திட்டத்தின்கீழ் நடைபெறும் பொதுச் சுகாதாரப் பயிற்சிகள்வழி பிற நாடுகளைச் சேர்ந்த 3,100க்கும் அதிகமான அரசாங்க அதிகாரிகளுக்கு உத்திபூர்வ உதவியையும் திறன் மேம்பாட்டையும் சிங்கப்பூர் வழங்கியிருக்கிறது.
“தொற்றுநோய்கள் மனித வரலாற்றை வடிவமைத்துள்ளன. நமது எதிர்காலத்தை அவை தொடர்ந்து வடிவமைக்கும். நுண்ணுயிரிகள் தொடர்ந்து உருமாறும். நாமும் அதற்கேற்ப மாறவேண்டும்,” என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
மருத்துவமனைகள் போன்றவற்றில் ‘அன்டிபயோட்டிக்ஸ்’ எனும் நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டைக் கடுமையாக்க வேண்டும் என்ற அவர், புதிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்குவதில் முதலீடு செய்ய மருந்து நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்க வேண்டும் என்றார்.
உலக வெப்பமடைதல் போக்கால் வெப்பமண்டலப் பகுதிகளில் மட்டுமே காணப்பட்ட தொற்றுநோய்கள் இப்போது பிற வட்டாரங்களையும் பாதிப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாகின்றன.
டெங்கி, சிக்குன்குனியா ஆகியவற்றை பரப்பும் ‘ஏஷியன் டைகர்’ கொசுக்கள் இப்போது 16 ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகின்றன என்றார் திரு ஓங்.
