சிங்கப்பூர் குடியரசு கடற்படையும் சீனக் கடற்படையும் இணைந்து நடத்தும் ‘கடல்துறை ஒத்துழைப்பு பயிற்சி’ செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது எனத் தற்காப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த இருதரப்புப் பயிற்சியின் தொடக்க விழா, சீனாவின் ஜான்ஜியாங் நகரில் உள்ள மா ஷியே கடற்படைத் தளத்தில் நடைபெற்றது.
இந்தத் தொடக்க விழாவிற்குச் சிங்கப்பூர் கடற்படையின் துணைப் படைத் தளபதி கர்னல் இங் யென் மெங், சீன மக்கள் விடுதலை ராணுவக் கடற்படையின் தெற்கு வட்டாரக் கட்டளையின் துணைத் தலைமை அதிகாரி சியா ஜிமிங் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதன்முதலாகத் தொடங்கப்பட்ட இந்த ஒத்துழைப்பு பயிற்சி, தற்போது ஐந்தாவது முறையாக நடைபெறுகிறது.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில், சிங்கப்பூர் கடற்படையின் ‘ஃபார்மிடபிள்’ ரகப் போர்க்கப்பலான ‘ஆர்எஸ்எஸ் ஸ்டெட்ஃபாஸ்ட்’ சீனக் கடற்படையின் ‘ஜியாங்காய் II’ ரக போர்க்கப்பலான ‘பிஎல்ஏஎன்எஸ் டாலி’ ஆகிய இரண்டு அதிநவீன போர்க்கப்பல்கள் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பயிற்சி இரண்டு முதன்மை நிலைகளாகப் பிரிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது. மா ஷியே கடற்படைத் தளத்தில் செப்டம்பர் 5 முதல் 7 வரை நடைபெறும் முதற்கட்ட கரைசார் பயிற்சியின் போது, இரு நாட்டு கடற்படை அதிகாரிகளும் கூட்டுத் திட்டமிடல், உத்திகள் தொழில்முறை அனுபவப் பகிர்வுகளில் ஈடுபடுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் ஜான்ஜியாங் கடல் பகுதியில் இரண்டாம் கட்டப் பயிற்சிகள் தொடர்கின்றன.
கடலில் நடைபெறும் தீவிரப் பயிற்சியின் போது, இரு நாட்டுப் போர்க்கப்பல்களிலும் வீரர்கள் மாற்றிப் பயணம் செய்து களம் காண்பர். மேலும் நேரடித் துப்பாக்கிச் சூடு, உத்திபூர்வ கப்பல் நகர்வுகள், தகவல் தொடர்பு சோதனைகள், கூட்டுத் தேடுதல், மீட்பு நடவடிக்கைகள், அவசர மருத்துவ வெளியேற்றப் பயிற்சிகள் உள்ளிட்ட பல முக்கியப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அனைத்துலக அளவில் பரந்த அளவிலான நட்பு நாடுகளுடன் இணைந்து இதுபோன்ற கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பது, பரஸ்பர கற்றல், நம்பிக்கை, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த உதவுவதாகச் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


