ஷங்காய்: சீனா செழிப்படையும்போது சிங்கப்பூருக்கும் அதன் வர்த்தகங்களுக்கும் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கின்றன என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
ஆசியாவிலும் உலகில் உள்ள முக்கிய பொருளியல்களுடனும் பங்காளித்துவ ஒப்பந்தங்கள் இருக்கும்போது எந்த ஒரு தனி நாட்டையும் சார்ந்திருக்கவேண்டிய நிலையைச் சிங்கப்பூரால் தவிர்க்க முடியும் என்றார் அவர்.
இம்மாதம் 18ஆம் தேதி சீனாவுக்குச் சென்ற மூத்த அமைச்சர் லீ, அங்குள்ள துறைமுக நிறுவனத்தையும் தளவாடத் தொழிற்பேட்டையையும் பார்வையிட்டார்.
“சிங்கப்பூர் சீன இனத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. ஆனால், நாம் பல இன மக்கள் கொண்ட ஒரு சமுதாயம். நாம் தனி இறையாண்மையைக் கொண்டுள்ள தனி நாடு. சீனாவுடன் இருதரப்பு நன்மைகளுக்காக நட்பார்ந்த ரீதியில் ஒத்துழைக்கிறோம்,” என்று ஐந்து நாள் பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் திரு லீ பேசினார்.
பல இனப் பேராளர்களுடன் தம்மைப் பார்க்கும் சீனப் பங்காளிகள் சிங்கப்பூரைப் புரிந்துகொள்வதாக அமைச்சர் லீ கூறினார்.
ஆனால், சிங்கப்பூருக்கு அவர்கள் வருகை தந்து, சிங்கப்பூரர்களுடன் நேரம் செலவிடும்போதுதான் நமது சமுதாயம் எப்படி இயங்குகிறது என்பதை அவர்களால் முழுமையாக உணர முடியும் என்று திரு லீ வலியுறுத்தினார்.
சீனா அதன் வளரும் பொருளியலால் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முற்படுகிறது. அமெரிக்கா மேற்கத்திய வட்டாரத்தில் அதன் பிடியை வலுப்படுத்த முனைகிறது. இதற்கிடையே, சிங்கப்பூர் ஏதாவது ஒரு பக்கத்தைத் தெரிவுசெய்யவேண்டும் என்ற நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று திரு லீ விளக்கம் அளித்தார்.
ஆனால், சிங்கப்பூரைப் பொறுத்தவரை அனைவரும் நண்பர்களே. சிங்கப்பூரின் நலனைக் கருத்தில்கொண்டு மட்டுமே ஒரு நிலைப்பாட்டைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
சீனாவுக்கான பயணத்திலிருந்து அறிந்துகொண்டதைப் பகிர்ந்துகொண்ட திரு லீ, செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா மிக விரைவாகச் செல்கிறது என்றார். சிங்கப்பூரும் அதே போல முன்னேறவேண்டும் என்றார் அவர்.
சீனா, தொழில்நுட்ப வளர்ச்சியை நாட்டின் முக்கிய குறிக்கோளாக அமைத்துள்ளது என்ற திரு லீ, சிங்கப்பூர் அதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

