துணைப் பிரதமர் கான் கிம் யோங், சீனாவின் தென்மேற்கே உள்ள சோங்சிங் நகருக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
வரும் திங்கட்கிழமை (டிசம் பர் 15) சீனாவுடனான சிங்கப்பூரின் வருடாந்திர உயர்நிலைச் சந்திப்புகளில் அவர் பங்கேற்பார். இருதரப்பும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் வலுப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) வெளியிட்ட அறிக்கையில் அதுபற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது.
சீனத் துணைப் பிரதமர் டிங் ஷுவெசியாங்குடன் இணைந்து திரு கான், இரு தரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டு மன்றத்திற்குத் தலைமை தாங்குவார் என்று அறிக்கை குறிப்பிட்டது. இரு நாட்டுக்கும் இடையில் நிலவும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மன்றம் ஆராய்கிறது.
இரண்டு அரசாங்கங்களுக்கும் இடையில் மூன்று முக்கியத் திட்டங்கள் நடப்பில் உள்ளன. சூச்சாவ் தொழிற்பேட்டை, தியான்ஜின் சுற்றுச்சூழல் நகரம், சோங்சிங் இணைப்புத் திட்டம் ஆகியவையே அந்தத் திட்டங்கள். அவற்றின் நிலையையும் அவற்றை எவ்வாறு மேம்படுத்துவது என்பதையும் தலைவர்கள் இருவரும் மறுஆய்வு செய்வர்.
சிங்கப்பூரும் சீனாவும் அரசதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு 35 ஆண்டு நிறைவுபெற்றதை இவ்வாண்டு கொண்டாடுகின்றன.
வர்த்தக, முதலீட்டு நடவடிக்கையாகத் தொடங்கிய உறவு, இப்போது பல துறைகளுக்கு விரிவடைந்துள்ளது. பசுமை, மின்னிலக்கப் புத்தாக்கம், நிதி, நிர்வாகம், கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, உணவுப் பாதுகாப்பு முதலியவை அவற்றுள் அடங்கும்.
சோங்சிங் இணைப்புத் திட்டம் தொடங்கி இவ்வாண்டுடன் பத்தாண்டு நிறைவு பெறுகிறது. அது நகர்ப்புறத் திட்டமன்று. மாறாக, அது சிங்கப்பூருடன் ஒத்துழைப்பதற்கான தளம். தென்மேற்குச் சீனாவுக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையில் இணைப்பை வலுப்படுத்துவது நோக்கம்.
தொடர்புடைய செய்திகள்
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரின் முதலீடு சோங்சிங்கில் இரு மடங்கிற்கும் அதிகமாகியுள்ளது. 2015ல் US$5.7 பில்லியனாக இருந்த அது 2024ல் US$12.7 (S$16.4) பில்லியனுக்குக் கூடியது.
துணைப் பிரதமர் கான் கிம் யோங், சீனாவுக்கு நான்கு மாதத்தில் இரண்டாவது முறையாகப் பயணம் மேற்கொள்கிறார்.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, மனிதவள அமைச்சர் டான் சீ லெங் முதலியோரும் துணைப் பிரதமர் கானுடன் சீனா செல்கின்றனர்.
மூத்த துணையமைச்சர்கள் ஸாக்கி முகம்மது, டான் கியட் ஹாவ், லோ யென் லிங், சுன் ஷுவெலிங் முதலியோரும் சீனாவுக்குப் போகின்றனர்.

