தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத்தில் திடீரென ஏற்பட்ட புதைகுழியில் சிக்கிய ஒரு பெண்ணைக் காப்பாற்றிய ஏழு வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதன்கிழமை (ஆகஸ்ட் 6) சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் சமூக உயிர்க்காப்பாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
திரு பிச்சை உடையப்பன் சுப்பையா, திரு சதாபிள்ளை ராஜேந்திரன், திரு அன்பழகன் வேல்முருகன், திரு போஸ் அஜித்குமார், திரு பூமாலை சரவணன், திரு கணேசன் வீரசேகர், திரு ஆறுமுகம் சந்திரசேகரன் ஆகியோருக்கு மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோ பெய் மிங் விருதுகளை வழங்கினார். அவர் உள்துறை; சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சரும் ஆவார்.
ஜூலை 26ஆம் தேதி ஏற்பட்ட புதைகுழியில் கார் விழுந்தபோது அதன் ஓட்டுநரை அவர்கள் காப்பாற்றினர்.
நிகழ்வில் பேசிய திரு கோ, ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
“ஆபத்திலிருந்து விலகிச் செல்வதற்குப் பதிலாக, நீங்கள் தைரியமாக உங்கள் உயிரைப் பணயம் வைத்து, புதைகுழியில் விழுந்த வாகனத்திலிருந்து ஓட்டுநரை மீட்க முன்வந்தீர்கள்,” என்று அவர் கூறினார்.
“இன்று சிங்கப்பூரின் சில பகுதிகளைக் கட்டியெழுப்பவும் அவற்றைப் பராமரிக்கவும் நீங்கள் பங்காற்றியுள்ளதால், சிங்கப்பூர் சிறந்த நாடாக உள்ளது,” என்றும் அவர் பாராட்டினார்.
இந்த ஏழு ஊழியர்களுக்கும் சிங்டெல் நிறுவனத்தின் ஆதரவில் ஓராண்டுக்கான வரம்பற்ற கைப்பேசி இணையத் தரவுகளும் வீட்டு உபயோகப் பொருள்கள் அடங்கிய அன்பளிப்புப் பைகளும் வழங்கப்பட்டன. மரின் பரேட் குடிமக்கள் ஆலோசனைக் குழு இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தது.
ஒவ்வொரு அன்பளிப்புப் பையிலும் சலவைத் தூள், துண்டுகள், குளியல் ஜெல், ஒரு கையடக்க விசிறி, மல்லிகை அரிசி போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள் இருந்தன. இந்த ஏழு ஊழியர்களுக்கும் பாரம்பரிய இந்திய உணவுடன் விருந்தும் அளிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
புதைகுழியைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 43 ஊழியர்களுக்கும் அன்பளிப்புப் பைகள் வழங்கப்படவுள்ளன.