நீடித்த நிலைத்தன்மையில் சிங்கப்பூர் உறுதி: துணைப் பிரதமர் கான்

1 mins read
c7e56620-3707-4fad-8a30-5c0fd170b5d4
துணைப் பிரதமர் கான் கிம் யோங். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர், நீண்டகால கண்ணோட்டத்தில் நீடித்த நிலைத்தன்மையைக் கட்டிக்காப்பதில் உறுதியோடு இருக்கிறது என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது பருவநிலை மாற்று நடவடிக்கைகளுக்கான பாதை நிச்சயமற்று உள்ளது. ஆனால் சிங்கப்பூரின் கடப்பாடு மாறாது என்றார் அவர்.

நீடித்த நிலைத்தன்மை பற்றிய சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அறிக்கை ஜூலை 9ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் ஆணையத்தின் தலைவருமான திரு கான், புவிசார் அரசியல் மாற்றம், நிச்சயமற்ற வர்த்தகம், பொருளியல் சூழல் ஆகியவை பருவநிலை நடவடிக்கைகளுக்குக் குறிப்பிடத்தக்க சவால்களாக இருக்கின்றன என்றார்.

சில பொருளியல் அமைப்புகள், உலகளாவிய பருவநிலை மாற்று நடவடிக்கைகளிலிருந்து விலகிவிட்டதாகவும் இதற்கு ஆதரவாக இருந்தவர்களும் தங்கள் உறுதிமொழிகளை மறு மதிப்பீடு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஆனால் சிங்கப்பூர் 2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயுவை முற்றிலும் குறைக்கும் இலக்கை அடைந்து போட்டித்தன்மை வாய்ந்த, குறைந்த கரிம வெளியேற்றத்தைக் கொண்ட பொருளியலை உருவாக்க உறுதிபூண்டுள்ளது என்றார் அவர்.

“ஒரு முன்னணி நீடித்த நிலைத்தன்மையான நிதி நிலையமாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் சிங்கப்பூரும் இவ்வட்டாரத்தின் நீடித்த நிலைத்தன்மைமிக்க எதிர்காலத்திற்கு மாறுவதை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளன,” என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் செயல்படாமல் இருந்தால் 2070ஆம் ஆண்டுவாக்கில் ஆசிய பசிபிக் வட்டாரத்தின் உள்நாட்டு உற்பத்தி 17 விழுக்காடு சரிவுக்கு வழி வகுத்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்