2027 முதல் திமோர் லெஸ்டே ஊழியர்களைப் பணியமர்த்த சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அனுமதி

2027 முதல் திமோர் லெஸ்டே ஊழியர்களைப் பணியமர்த்த சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அனுமதி

2 mins read
f4543535-f43c-498d-bffb-70248dd2c7a6
கட்டுமானம், கப்பல் கட்டுமானம் ஆகிய துறைகளில் திமோர் லெஸ்டே ஊழியர்களை வேலை அனுமதிச்சீட்டின்கீழ் பணியமர்த்த சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

திலி: 2027ஆம் ஆண்டு முதல் கட்டுமானம், கப்பல் கட்டுமானத் துறை போன்றவற்றில் திமோர் லெஸ்டேவைச் சேர்ந்த ஊழியர்களைப் பணியமர்த்த சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நடவடிக்கை இருதரப்புக்கும் நன்மையளிப்பதாக அமையும் என இரு நாட்டுத் தலைவர்களும் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) நடந்த கூட்டுச் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

பிரதமர் லாரன்ஸ் வோங் இரு நாள் அதிகாரபூர்வப் பயணமாகத் திமோர் லெஸ்டே சென்றுள்ளார்.

அப்பயணத்தின் ஒருபகுதியாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “இந்த நடவடிக்கை திமோர் லெஸ்டே மக்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, இரு நாட்டு வர்த்தகம், மக்கள் ஆகிய தரப்புகளின் இடையே தொடர்புகளையும் வலுப்படுத்தும்,” எனக் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியிலிருந்து, ‘என்எஸ்டி’ எனப்படும் வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்துவதற்கான பாரம்பரியமல்லாத நாடுகளின் பட்டியலில் (non-traditional source country for work permit holders) திமோர் லெஸ்டே அதிகாரபூர்வமாகச் சேர்க்கப்படும் எனச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சிங்கப்பூரில் உள்ள கட்டுமானம், கப்பல் கட்டுமானம் ஆகிய துறைகளைச் சார்ந்த நிறுவனங்களில் திமோர் லெஸ்டே ஊழியர்களை வேலைக்கு அமர்த்த முடியும்.

மேலும், உற்பத்தி, சேவைத் துறைகளில் உள்ள சில குறிப்பிட்ட வேலைகளுக்கும் அவர்கள் அனுமதிக்கப்படுவர்.

கட்டுமானத் துறை போன்ற துறைகளில் திமோர் லெஸ்டே ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்குச் சிங்கப்பூர் நிறுவனங்கள் ஏற்கனவே ஆர்வம் காட்டி வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் மனிதவள அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மேலும், சிங்கப்பூர் வர்த்தக நிறுவனங்கள் தங்களின் மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, பன்முகத்தன்மை கொண்ட ஊழியர் சந்தையை அணுகுவதற்கு இது வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

அண்மையில், 'என்எஸ்டி’ நாடுகளின் பட்டியலில் பூட்டான், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகள் இணைக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
திமோர் லெஸ்டேவேலை அனுமதிச்சீட்டுஅனுமதிசிங்கப்பூர்நிறுவனம்