இணையத் தாக்குதல், மோசடி பாதிப்புகளைச் சமாளிக்க காப்புறுதிகளை அதிகம் நாடும் சிங்கப்பூர் நிறுவனங்கள்

இணையத் தாக்குதல், மோசடி பாதிப்புகளைச் சமாளிக்க காப்புறுதிகளை அதிகம் நாடும் சிங்கப்பூர் நிறுவனங்கள்

3 mins read
64b4cdf2-b1d2-43ef-ad02-8d5306ebf2e2
இணையத் தாக்குதல், மோசடிகளால் ஏற்படும் இழப்புகளைச் சமாளிக்க அதிகமான நிறுவனங்கள் காப்புறுதிகளை எடுத்து வருகின்றன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள், மோசடிகளால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிப்பதற்காகக் காப்புறுதித் திட்டங்களில் சேர்ந்து வருகின்றன.

கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் இதற்கான தேவை கணிசமாக அதிகரித்து வருவது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாயிலாகத் தெரிய வருகிறது.

வங்கிகள், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், மேகக்கணினி சேவையாளர்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ந்து அதிக அளவில் இத்தகைய காப்புறுதிகளை வாங்குகின்றன. மின்னிலக்கமயமாக்கல் அதிகரித்து வருவதால் உற்பத்தித் துறை, போக்குவரத்து, தளவாடத் துறை, சில்லறை வர்த்தகம், சுகாதாரப் பராமரிப்பு, விருந்தோம்பல் போன்ற சேவைத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் காப்புறுதிகளில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றன.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட சிறப்புக் காப்பீட்டு நிறுவனமான ‘மார்க்கெல்’, சிங்கப்பூரில் அதன் இணையக் காப்புறுதி வர்த்தகம் 2022 முதல் சீராக அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது.

அண்மையில் 2023, 2024ஆம் ஆண்டுகளில் ஓராண்டில் விற்கப்படும் காப்பீட்டுகளின் எண்ணிக்கை 56 விழுக்காடு முதல் 125 விழுக்காடு வரை வளர்ச்சி கண்டுள்ளது.

இதற்கிடையே, வட்டாரக் காப்பீட்டு நிறுவனமான ‘கியூபிஇ ஏசியா’, 2024 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு 25 முதல் 30 விழுக்காடு வரை கூடுதல் காப்பீட்டுத் திட்டங்களை விற்பனை செய்துள்ளது.

ஃபிரான்சைத் தளமாகக் கொண்ட ‘ஏஎக்ஸ்ஏ எக்ஸ்எல்’ காப்பீட்டு நிறுவனம், அமெரிக்கக் காப்பீட்டு நிறுவனமான ‘மார்ஷ்’ ஆகியவை 2023 முதல் 2025 வரை இங்கு முதல்முறையாகக் காப்புறுதி வாங்கும் நிறுவனங்களுக்கு அதிகமான காப்புறுதித் திட்டங்களை விற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளன. ஆனால் எவ்வளவு நிறுவனங்கள் என்பது குறித்த எண்ணக்கையை அவை தெரிவிக்கவில்லை.

சிங்கப்பூரைச் சேர்ந்த ‘ஏடபிள்யூஜி இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ்’, லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட தரகு நிறுவனமான ‘ஹவ்டன்’ ஆகியவை, அதிகமான நிறுவனங்கள் இணையக் காப்புறுதிகளை வாங்கியதாகக் கூறியுள்ளன, ஆனால் அவையும் புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை.

ஜப்பானிய காப்பீட்டு நிறுவனமான ‘எம்எஸ்ஐஜி’, ஜெர்மன் காப்பீட்டு நிறுவனமான ‘அலியான்ஸ்’ ஆகியவை சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள், அதுகுறித்து விவரம் கேட்பது அதிகரித்துள்ளதாகப் பதிவு செய்துள்ளன. ஆனால் துல்லியமான புள்ளிவிவரங்களை அவை வெளியிடவில்லை.

இணையத் தாக்குதல்களிலிருந்து மீள்வதற்கான செலவுகள், தடயவியல் நிபுணர்கள், வழக்கறிஞர்களைப் பணியில் அமர்த்துவது, தரவுகளை மீட்டெடுப்பது போன்றவற்றுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

ஒரு நிறுவனத்தின் அளவு, துறை, அது செயல்படும் இடம், கடந்தகால இழப்பீட்டுப் பதிவுகள், இணையப் பாதுகாப்பு முறைகள், அபாயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு காப்பீட்டுத் தவணைத் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்நிலையில் வேகமான, பெரிய அளவிலான, மிகவும் அதிநவீன தாக்குதல்களுக்கு செயற்கை நுண்ணறிவு வழிவகுக்கிறது. இந்த அச்சுறுத்தலை இங்குள்ள வணிகங்கள் ஏற்கனவே உணர்ந்துள்ளன. ஏறக்குறைய 400 சிங்கப்பூர் நிறுவனங்களை உள்ளடக்கிய மே 2026இல் நடத்தப்பட்ட ‘கியூபிஇ’ ஆய்வில் 39 விழுக்காடு நிறுவனங்கள் கடந்த ஆண்டில் குறைந்தபட்சம் ஒரு ஏஐ தொடர்பான இணையச் சம்பவத்தையாவது சந்தித்துள்ளது தெரியவருகிறது.

சிங்கப்பூரில் உள்ள மிகவும் கடுமையான விதிமுறைகள், விதிமீறல்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. உதாரணமாக, அக்டோபர் 2022ல், தரவுப் பாதுகாப்பு மீறல்களுக்கான ஒரு நிறுவனத்தின் வருடாந்தர உள்ளூர் விற்றுமுதலில் 10 விழுக்காடு அல்லது ஒரு மில்லியன் வெள்ளி இதில் எது அதிகமோ அது, அதிகபட்ச தண்டனைத் தொகையாக விதிக்கப்படுகிறது.

இருபது மில்லியன் வெள்ளி வருடாந்தர விற்றுமுதல் கொண்ட ஒரு நடுத்தர அளவிலான நிறுவனம், ஒரே ஒரு விதிமீறல் தவற்றுக்காகக்கூட $2 மில்லியன் வரை அபராதத்தைச் சந்திக்க நேரிடும். இதனால் ஒழுங்குமுறை பொறுப்புகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அதிக வாய்ப்புகள் கொண்ட காப்பீட்டை வாங்க வேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ‘லிபர்ட்டி’, ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்ட ‘சோம்போ’ ஆகியவை அண்மையில் இத்துறையில் நுழைந்த நிறுவனங்களில் சில. அதே வேளையில் ‘சப்’, ‘ஏஐஜி’, ‘எம்எஸ்ஐஜி’ போன்ற காப்பீட்டு நிறுவனங்கள் கணிசமாகப் பரந்த அளவிலான காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்குகின்றன என்று இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
இணையத் தாக்குதல்காப்புறுதிஅமெரிக்காசிங்கப்பூர்