சிங்கப்பூரில் உள்ள சில நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களுக்குச் செல்லப்பிராணிகளைப் பராமரிக்க விடுமுறை வழங்குகின்றன.
‘பிரேவ் கம்யூனிகேஷன்ஸ்’ அத்தகைய நிறுவனங்களில் ஒன்றாகும்.
செல்லப்பிராணிகள் மீது பெற்ற பிள்ளைகளைப்போல் அன்பு காட்டிப் பராமரிக்கும் ஊழியர்கள் சிலர், புரிந்துணர்வுடன் நிறுவனம் காட்டும் இத்தகைய ஆதரவு தங்கள் மனவுளைச்சலைப் போக்குவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.
பொதுத் தொடர்பு, விளம்பர நிறுவனமான ‘பிரேவ் கம்யூனிகேஷன்ஸ்’, ஆண்டுக்கு மூன்று நாள்கள் நோயுற்ற செல்லப்பிராணிகளைப் பராமரிப்பதற்கான விடுமுறையை ஊழியர்களுக்கு வழங்குகிறது. மேலும், செல்லப்பிராணிகளைத் தத்தெடுப்பதற்கு இரண்டு நாள் விடுமுறையும் அவை உயிரிழந்தால் அதன் தொடர்பில் மூன்று நாள் விடுமுறையும் வழங்கப்படுகிறது.
தற்போது நாய்கள், பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் ஊழியர்களுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்படுகிறது. மற்ற செல்லப்பிராணிகளை வைத்திருப்போருக்கும் இந்த நடைமுறையை விரிவாக்குவது குறித்துப் பரிசீலிப்பதாக நிறுவனத்தின் உரிமையாளர் எமிலின் ஆங் கூறினார்.
குடும்பம் என்பதன் வரையறை இக்காலத்தில் மாறுபட்டுள்ளது. பலரும் செல்லப்பிராணிகளைத் தங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே கருதுகின்றனர். எனவே, ஊழியர்களின் உடல், மன நலத்துக்கேற்ற அம்சங்களில் கவனம் செலுத்துகிறோம் என்றார் அவர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்ட சில நிறுவனங்களில் செல்லப்பிராணிப் பராமரிப்பு விடுமுறை என்பது அரிதான சலுகையாகவே விளங்குவதாக அது குறிப்பிட்டது.
செல்லப்பிராணிகளை வளர்க்கும் போக்கு சிங்கப்பூரில் நிலையாக அதிகரித்துவரும் வேளையில், இத்தகைய விடுமுறை, திறனாளர்களை ஈர்க்கவும் தக்கவைத்துக்கொள்ளவும் நிறுவனங்களுக்கு உதவக்கூடும் என்று சிலர் கருத்துரைத்துள்ளனர்.

