சிங்கப்பூரிலுள்ள ஆள்சேர்ப்பு பற்றிய எண்ணப்போக்கு, 2021க்குப் பிறகு அதன் மிகக் குறைந்த அளவிற்குக் குறைந்துள்ளது.
ஆனாலும், செயற்கை நுண்ணறிவு, சிந்தனைத் திறன்மிக்க ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் வழங்க முதலாளிகள் தயாராக உள்ளனர்.
‘மேன்பவர் குரூப்’ நிறுவனம் சிங்கப்பூரில் ஆய்வு செய்த 599 நிறுவனங்களில் மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு அறிவாற்றலுக்காகக் கூடுதல் சம்பளம் வழங்குவதாகத் தெரிவித்துள்ளன.
பொதுத்துறை, சுகாதார, சமூக சேவைகள், தொழில்முறை, அறிவியல், தொழில்நுட்பச் சேவைகள் ஆகிய துறைகளில் இந்த நிலைப்பாடு மிகவும் வெளிப்படையாகக் காணப்பட்டது.
செயற்கை நுண்ணறிவுச் செயலிகளை உருவாக்கும் திறன்களுக்கு (64 விழுக்காடு), பாரம்பரியத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தரவுத் திறன்களுக்கு (56 விழுக்காடு) அதிகச் சம்பளம் வழங்கவும் முதலாளிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக, ஆள்சேர்ப்பு நிறுவனத்தின் காலாண்டு வேலைவாய்ப்புச் சாத்தியக்கூறு ஆய்வு ஜூன் 9 அன்று வெளியிட்டது.
கூர்ந்து ஆராயும் சிந்தனை, பிரச்சினைகளைத் தீர்ப்பது, தகவல் தொடர்பு, ஒருங்கிணைந்து செயல்படுதல், தலைமைத்துவம் மற்றும் சமூகச் செல்வாக்கு போன்ற மென்திறன்களுக்கும் முதலாளிகளால் அதிக ஊதியம் வழங்கப்படுகிறது.
ஜூலை மாதம் தொடங்கும் அடுத்த காலாண்டிற்கான ஆள்சேர்ப்புத் திட்டங்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது, தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக 41 விழுக்காட்டு முதலாளிகள் மட்டும் கூறினர்.
அதே வேளையில், 22 விழுக்காட்டினர் மனிதவளம் குறையும் என எதிர்பார்க்கின்றனர். தற்போதைய நிலையையே தொடர விரும்புவோரில் 27 விழுக்காட்டினர், ஆள்சேர்ப்பு முடிவுகளை எடுப்பதற்கு முன்பு பொருளியல் எவ்வாறு மாறுகிறது என்பதைப் பார்க்க விரும்புகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
புவிசார் அரசியல் நிலவரங்களில் தெளிவு பிறக்கும் வரை ஊழியர்களின் எண்ணிக்கையை நிலையாக வைத்திருக்க முதலாளிகள் பலர் முடிவு செய்வதாக, மேன்பவர் குரூப் சிங்கப்பூரின் நாட்டு மேலாளர் லிண்டா தியோ குறிப்பிட்டார்.
“முதலாளிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே நிற்கிறார்கள் என்பதில்லை. மாறாக, ஆள்சேர்ப்பு முடிவுகள் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் திட்டமிட்டதாகவும் மாறி வருகின்றன,” என்று அவர் கூறினார்.
அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் திறன்களைப் பெறும் நோக்கில் நிறுவனங்கள் செயல்படுவதாகவும் லிண்டா கூறினார்.
“ஒட்டுமொத்த ஆள்சேர்ப்பு மனநிலை மந்தமாக இருந்தாலும், உற்பத்தித்திறன், செயல்திறன், நீண்டகாலப் போட்டித்தன்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதில் நிறுவனங்கள் கவனம் செலுத்துவதால், செயற்கை நுண்ணறிவு, விமர்சனச் சிந்தனைத் திறன்களுக்குத் தொடர்ந்து கூடுதல் சம்பளம் வழங்க முன்வருவது, திறன் அடிப்படையிலான ஆள்சேர்ப்பு அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவுத் திறன்களுக்கு முதலாளிகள் அதிகச் சம்பளம் வழங்கத் தயாராக இருப்பதை அண்மையில் வேறு இரண்டு அறிக்கைகளும் குறிப்பிடுகின்றன.

