சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்று $300,000க்கும் அதிகமான தொகையை மோசடிவழி இழந்திருக்கக்கூடும்.
நிறுவனத்தின் வழங்குநர்களில் ஒருவராக மோசடிக் கும்பல் ஆள்மாறாட்டம் செய்ததை அறியாது நிறுவன ஊழியர் ஏமாந்துவிட்டார்.
காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில், அந்த ஊழியருக்கு ஜனவரி 7ஆம் தேதி மின்னஞ்சல் ஒன்று வந்ததாகவும் மின்னஞ்சல் அனுப்பிய அந்த போலி வழங்குநர், உண்மையான வழங்குநரின் மின்னஞ்சல் முகவரியில் இருந்த ‘ஜிமெயில்.காம்’ (gmail.com) என்பதனை ‘ஏஷியா.காம்’ (asia.com) என்று மாற்றி இருந்ததாகவும் நம்பப்படுகிறது.
தங்களின் சேவைகளுக்கான கட்டணத்தை ஐக்கிய அரபு சிற்றரசுகளில் உள்ள புதியதொரு வங்கிக் கணக்குக்கு மாற்றுமாறு மோசடிக்காரர்கள் அந்த மின்னஞ்சலில் கேட்டுக்கொண்டதாகக் காவல்துறையினர் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டனர்.
மின்னஞ்சல் முகவரியில் செய்யப்பட்ட சிறு மாற்றத்தைக் கவனிக்காத அந்த நிறுவன ஊழியர், கேட்டுக்கொண்டபடி அந்தப் புதிய வங்கிக் கணக்குக்கு $300,000க்கும் அதிகமான தொகையை மாற்றிவிட்டார்.
உண்மையான வழங்குநர் தமது வங்கிக் கணக்கை மாற்றவில்லை என்று கூறியதை அடுத்து மோசடி குறித்து அந்தப் பெண் ஊழியருக்கு ஜனவரி 14ஆம் தேதி தெரியவந்தது. மறுநாள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
சிங்கப்பூர் காவல்துறையினரின் மோசடிக்கு எதிரான பிரிவு, ஐக்கிய அரபு சிற்றரசுகள் அதிகாரிகளுடனும் இன்டர்போல் அமைப்புடனும் இணைந்து செயல்பட்டு, அனுப்பப்பட்ட முழுத் தொகையையும் மீட்டதுடன் அதை நிறுவனத்திடமே ஒப்படைத்தது.
மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 16.3% அதிகரித்தது. அந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் புதிய உச்சமாக $385.6 மில்லியன் பணத்தை, மோசடிவழி பாதிக்கப்பட்டோர் இழந்தனர்.