செங்கடலில் சவூதி அரேபியாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதும் வணிகக் கப்பல்கள் மீதும் நடத்தப்பட்ட அண்மையத் தாக்குதல்களுக்குச் சிங்கப்பூர் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நிலவரம் குறித்துச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கடல்சார் சட்டத்திற்கான ஐக்கிய நாட்டு உடன்பாட்டின்படி, கடல்வழிப் போக்குவரத்து உரிமைகளும் சுதந்திரமும் மதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
மேலும், கடல்சார் பாதுகாப்புக்கான அனைத்துலக விதிமுறைகளுக்கேற்ப கப்பல்களின் பாதுகாப்பையும் கடலோடிகளின் பாதுகாப்பையும் உறுதியாகப் பேண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அனைத்துத் தரப்பும் அமைதியையும் கட்டுப்பாட்டையும் பேண வேண்டும் என்றும் அமைச்சு கேட்டுக்கொண்டது.
ஏமனின் ஹூதிப் படையினர், சவூதி அரேபியாவின் ஜிசான், யான்பு நகர்களில் அரசு எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆலைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சின் அறிக்கை வெளிவந்தது.
இத்தகைய தாக்குதல்கள் மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிப்பதோடு, முக்கியக் கடல்வழிச் சரக்குப் போக்குவரத்தை மீண்டும் பாதித்து, ஏமனில் உள்நாட்டுப் போரை மூட்டிவிடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன.

