அமெரிக்க வரிவிதிப்பால் சிங்கப்பூர் கட்டுமானத் துறைக்குப் பாதிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் சிங்கப்பூர் கட்டுமானத் துறைக்குப் பாதிப்பு

2 mins read
b997aef4-53c8-4021-b147-b4765ac4b66e
பெரிய கட்டுமானத் திட்டங்களுக்கான மூலப்பொருள் செலவுகள் ஐந்து முதல் 10 விழுக்காடு வரை கூடினால், வரவுசெலவு மில்லியன்கணக்கான வெள்ளிவரை உயரக்கூடும். - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் உலகளாவிய வரிவிதிப்பால் சிங்கப்பூரின் கட்டுமானத் துறைக்குப் பாதிப்பு தென்படத் தொடங்கியுள்ள. மூலப்பொருள்களின் விலை, விநியோகம் குறித்த நிச்சயமற்ற சூழலை இங்குள்ள நிறுவனங்கள் எதிர்கொண்டு வருவதாக உள்ளூர் தொழில்துறைச் சங்கங்கள் கூறுகின்றன.

ஆனால், சிங்கப்பூரில் கட்டுமானப் பொருள்களுக்கான செலவுகளில் வரிகளின் தாக்கம் குறித்து பகுப்பாய்வாளர்கள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர்.

“எஃகு, அலுமினியம் மீதான அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பால் உலகளாவிய விநியோகத் தொடருக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரும் தாக்கத்தை உணரத் தொடங்கியுள்ளது.

“அமெரிக்க நிறுவனங்கள் மூலப்பொருள்களைக் குவித்து வருவதால், சீனாவிலும் இந்தியாவிலும் ஆலைகள் அடுத்த ஆறேழு மாதங்களுக்குப் பொருள்களைக் கொள்முதல் செய்வதில் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இதனால் ஆசியாவுக்கு மூலப்பொருள்கள் கிடைப்பது குறையும். அதனால் செலவுகள் கூடியுள்ளன,” என்று சிங்கப்பூர் உற்பத்திச் சம்மேளனத்தின் கட்டுமானப் பொருள்களுக்கான தொழில்துறைக் குழுமத் தலைவர் பெஞ்சமின் லிம் கருதினார்.

வரிவிதிப்பில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதால் அலுமினியத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. 2024 செப்டம்பரில் US$2,449.90ஆக இருந்த அது, 2025 மார்ச்சில் US$2,658.30ஆக உச்சம் தொட்டது. பின்னர் ஏப்ரலில் US$2,371.60ஆக சற்றுக் குறைந்தது.

“கடந்த சில மாதங்களாக அலுமினிய விலையின் இந்த ஏற்ற இறக்கம், வரவுசெலவுக்குத் திட்டமிடுவதிலும் கொள்முதல் செய்வதிலும் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது,” என்றார் திரு லிம்.

பெரிய கட்டுமானத் திட்டங்களுக்கான மூலப்பொருள் செலவுகள் ஐந்து முதல் 10 விழுக்காடு வரை கூடினால், வரவுசெலவு மில்லியன்கணக்கான வெள்ளி வரை உயரக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

இந்நிலையில், எஃகு மீதான வரிவிதிப்பால் இங்குள்ள கட்டுமானத் துறை இதுவரை மோசமாகப் பாதிக்கப்படவில்லை என்பதை திரு லிம் சுட்டினார்.

“எனினும், உலகளவில் எஃகு விலைகள் உயர்ந்தால், அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் அதன் தாக்கத்தை நாம் உணரத் தொடங்கலாம்,” என்றார் அவர்.

எஃகு, அலுமினியம் மீதான துறை சார்ந்த வரிவிதிப்பால் சிங்கப்பூரின் கட்டுமானத் துறையில் செலவினங்கள் உயர்வதற்கான சாத்தியம் இருப்பதாக சிங்கப்பூர் ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் லீ கே சாய் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
கட்டுமானத் துறைசிங்கப்பூர்வரி