உலகளாவிய பெருந்தொற்று நிதிக்கு சிங்கப்பூர் கூடுதலாக US$10 மில்லியன் (S$13 மில்லியன்) பங்களித்துள்ளதாக சுகாதார, நிதி அமைச்சுகள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
பிரேசிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜி20 நிதி, சுகாதார கூட்டு அமைச்சர்நிலைச் சந்திப்புக்கு மத்தியில் பெருந்தொற்று நிதிக்கு சிங்கப்பூரின் கூடுதல் பங்களிப்பு குறித்த அறிவிப்பு வெளியானது.
கூடுதல் நிதிக்கு உறுதியளிக்கும் நிகழ்வில் பங்கேற்ற சுகாதார அமைச்சர் ஓங் யி காங், “அடுத்த பெருந்தொற்றை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில், உலகளாவிய சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் சிங்கப்பூரின் தொடர் கடப்பாட்டை இது வெளிப்படுத்துகிறது,” என்றார்.
பெருந்தொற்று நிதி அதன் தாக்கத்தை அதிகப்படுத்த இரு அம்சங்களில் அது கவனம் செலுத்த வேண்டும் என திரு ஓங் பரிந்துரைத்தார். உலகளாவிய கண்காணிப்பும் வளர்ந்துவரும் நாடுகள் வருங்கால பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள ஆயத்தமாவதுமே அவை.
வளர்ந்துவரும் நாடுகள் பெருந்தொற்றுகளுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள உதவ 2022ல் உலக வங்கியால் பெருந்தொற்று நிதி அமைக்கப்பட்டது.
2022ல் சிங்கப்பூர் அந்த நிதிக்கு US$10 மில்லியன் பங்களித்தது.
ஜி20 சுகாதார அமைச்சர்நிலைக் கூட்டத்தில் பேசிய திரு ஓங், சுகாதாரப் பராமரிப்பு நிதி, மூப்படைதல் விவகாரங்களில் நிதி, சுகாதார அமைச்சர்கள் இணைந்து கவனம் செலுத்த வேண்டியதற்கான தேவையைக் குறிப்பிட்டார்.
தொடர் பராமரிப்பையும் செயற்கை நுண்ணறிவு புத்தாக்கத்தையும் வகைசெய்ய, சுகாதாரப் பராமரிப்பை மின்னிலக்கப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் கோடிட்டுக் காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
மின்னிலக்கமயமும் ஒருங்கிணைப்பும் தேவையில்லாத மறுபரிசோதனைகளைத் தவிர்க்க உதவும் என்றார் அவர்.