சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் மே மாதம் சற்று குறைந்து ஆண்டுக்காண்டு கணக்கீட்டில் 0.6 விழுக்காடு என்று பதிவாகி உள்ளது.
ஏப்ரல் மாதம் அது 0.7 விழுக்காடாக இருந்தது. மேலும், அதற்கு முந்திய மார்ச் மாதத்தில் நாலாண்டு காணாத 0.5 விழுக்காட்டுக்குச் சரிந்திருந்தது.
இதற்கு முன்னர் 2021 மார்ச் மாதம் மூலாதாரப் பணவீக்கம் 0.5 விழுக்காட்டுக்கு இறங்கி இருந்தது.
மே மாதம் பணவீக்கம் குறைந்ததற்கு உணவுப் பணவீக்கம் குறைந்ததே முக்கிய காரணம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் இணைந்து நேற்று (ஜூன் 23) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இருப்பினும், மாதாந்திர அடிப்படையில் மே மாத மூலாதாரப் பணவீக்கத்தில் எந்த மாற்றமும் பதிவாகவில்லை.
தங்குமிடச் செலவுகளையும் தனியார் போக்குவரத்துச் செலவுகளையும் கழித்துவிட்டு, மூலாதாரப் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. குடும்பங்களின் செலவுகளைப் பிரதிபலிக்க அவ்வாறு கணக்கிடப்படுகிறது.
மே மாதம் பதிவான மூலாதாரப் பணவீக்கமும் ஒட்டுமொத்தப் பணவீக்கமும் புளூம்பெர்க் ஆய்வில் பங்கேற்ற பொருளியல் நிபுணர்கள் தெரிவித்த முன்னுரைப்பை ஒத்து உள்ளன.
ஒட்டுமொத்தப் பணவீக்கம் ஏப்ரலில் 0.9 விழுக்காடும் மே மாதம் 0.8 விழுக்காடும் பதிவாகி இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
உணவு மற்றும் தனியார் போக்குவரத்துச் செலவுகளில் காணப்பட்ட சிறிய ஏற்றமே பெரும்பாலும் ஒட்டுமொத்தப் பணவீக்கத்தைப் பிரதிபலித்தது.
சமைக்கப்படாத உணவு விலைகள் சிறிய வேகத்தில் ஏறியதால் உணவுப் பணவீக்கம் 1.1 விழுக்காட்டைத் தொட்டது.
மே மாதம், மின்சாரம் மற்றும் எரிவாயுப் பணவீக்கம் மீண்டும் வீழ்ச்சி அடைந்து -3.7 விழுக்காடு ஆனது. மின்சார விலைகள் அதிகமாக இறங்கியது அந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.
அதேநேரம், சில்லறை மற்றும் இதர பொருள்களின் விலைகள் குறைவான வேகத்தில் இறங்கி -1 விழுக்காடு ஆனது.
அதேநேரம், சேவைப் பணவீக்கம் 1.1 விழுக்காடு என எந்த மாற்றமும் இன்றிப் பதிவானது.