சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 0.5 விழுக்காடாகக் குறைந்தது. இது நான்கு ஆண்டுகள் காணாத வீழ்ச்சி.
மேலும், புளூம்பெர்க் ஆய்வில் கணிக்கப்பட்ட 0.7 விழுக்காட்டைக் காட்டிலும் இது குறைவு.
பிப்ரவரி மாதப் பணவீக்கம் 0.6 விழுக்காடாகப் பதிவாகி இருந்தது.
சிங்கப்பூர் நாணய ஆணையம் புதன்கிழமை (ஏப்ரல் 23) இந்த விவரங்களைத் தெரிவித்தது.
நிச்சயமற்ற வர்த்தகப்போக்கால் உலகத் தேவை பலவீனமடைந்ததைத் தொடர்ந்து பணவீக்கம் தொடர்ந்து ஆறாவது மாதமாக சரிவுகண்டுள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகளும் அதில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன.
ஆண்டுக்காண்டு அடிப்படையில், பெரும்பாலான செலவினங்களில் சிறிய விலை ஏற்றமே காணப்பட்டது.
அதேவேளை, மின்சாரம், எரிவாயு ஆகியவற்றின் விலையும் சில்லரைப் பொருள்கள் மற்றும் இதர பொருள்களின் விலையும் சரிவு கண்டுள்ளதாகவும் ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன்னர் 2021 மார்ச் மாதம் அடிப்படைப் பணவீக்கம் 0.5 விழுக்காட்டுக்கு இறங்கி இருந்தது.
தற்போது மாதாந்திர அடிப்படையில் 0.1 விழுக்காடு குறைந்துள்ளது.
தங்குமிடச் செலவுகளையும் தனியார் போக்குவரத்துச் செலவுகளையும் கழித்துவிட்டு, அடிப்படைப் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது.
பயனீட்டாளர் விலைக் குறியீட்டில் (சிபிஐ), உணவுக் குறியீடு தவிர மற்ற எல்லாக் குறியீடுகளிலும் வீழ்ச்சி பதிவானதன் காரணமாக அடிப்படைப் பணவீக்கம் தணிந்துள்ளது.
சிபிஐ என்பது பயனீட்டாளர் விலை பணவீக்கத்தைக் கணக்கிட பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்தப் பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் எந்த மாற்றமும் காணாமல் 0.9 விழுக்காடாக நீடிக்கிறது.
அடிப்படைப் பணவீக்கத்தில் பதிவான வீழ்ச்சியைத் தனியார் போக்குவரத்துப் பணவீக்கம் முறியடித்ததால் அந்த விகிதம் மாறவில்லை.
இருப்பினும், ஒட்டுமொத்தப் பணவீக்கம் 1.1 விழுக்காடாக இருக்கும் என்று புளூம்பெர்க் ஆய்வு முன்னுரைத்ததைக் காட்டிலும் இது குறைவு.