சிங்கப்பூரில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக பணவீக்கம் குறைந்துள்ளது. உணவு விலைகள் அதிகமாக உயர்த்தப்படாததும் மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் குறைக்கப்பட்டதும் இதற்கான காரணங்கள்.
எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் மேலும் சீரடையும் என்று பொருளியலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தனியார்ப் போக்குவரத்து, குடியிருப்புச் செலவுகளை உள்ளடக்காத மூலாதாரப் பணவீக்கம், சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு ஜூலை மாதம் 3.8 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது. ஜூன் மாதத்தின் மூலப் பணவீக்கம் 4.2 விழுக்காடு.
அனைத்தையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த பணவீக்கம், ஜூலையில் 4.1 விழுக்காடாக இருந்தது. ஜூன் மாதத்தின் பணவீக்கம் 4.5 விழுக்காடு.
பயனீட்டாளர் விலைக் குறியீடு என்றும் அழைக்கப்படும் பணவீக்கம், கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு முன்பிருந்த சராசரி அளவைவிட இன்னமும் அதிகமாக இருந்தாலும், சென்ற ஆண்டின் அளவுக்குக் கடுமையாக இல்லை என்று டிபிஎஸ் பொருளியலாளர் சுவா ஹான் டெக் கூறினார்.
ஆனால், மாத அடிப்படையில், ஜூலை மாதம் மூலாதாரப் பணவீக்கம் 0.2 விழுக்காடு அதிகரித்தது. சேவைகள், உணவுப்பொருள்கள் ஆகியவற்றின் விலை உயர்வே இதற்கு முக்கியக் காரணம் என்றார் ஒசிபிசி வங்கியின் தலைமைப் பொருளியலாளர் திருவாட்டி செலினா லிங்.
ஒட்டுமொத்த பணவீக்கம், ஜூன் மாதத்தைவிட ஜூலை மாதம் 0.2 விழுக்காடு குறைந்தது. குடியிருப்பு, தனியார்ப் போக்குவரத்துச் செலவுகள் குறைந்தது இதற்குக் காரணம்.
ஜூலையில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிப்போருக்கு சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள் வழங்கப்பட்டதால் குடியிருப்புச் செலவுகள் குறைந்ததாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
மின்சார, எரிவாயு விலைகளே ஜூலையில் ஆக அதிகமாக 1.6 விழுக்காடு குறைந்தன. இவற்றின் விலை ஜூன் மாதம் 3.1 விழுக்காடு அதிகரித்திருந்தது.
வாகன விலை உயர்வு மெதுவடைந்ததால், தனியார்ப் போக்குவரத்தின் பணவீக்கம் ஜூன் மாதத்தின் 5.8 விழுக்காட்டைவிட ஜூலையில் 4.8 விழுக்காடாகக் குறைந்தது.
சேவைகளின் பணவீக்கம் ஜூலையில் எந்த மாற்றமும் இன்றி 3.6 விழுக்காடாக நீடித்தது.
இவ்வாண்டுக்கான ஒட்டுமொத்த பணவீக்கம் 4.5 விழுக்காட்டுக்கும் 5.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என முன்னதாகச் செய்த கணிப்பை ஆணையமும் அமைச்சும் நிலைநாட்டுகின்றன. மூலாதாரப் பணவீக்கம் 3.5 முதல் 4.5 விழுக்காட்டுக்கு இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

