சிங்கப்பூரில் இவ்வாண்டு ஏற்பட்ட மோசமான புகைமூட்டத்தால் அக்டோபர் 31ஆம் தேதி நிலவரப்படி, $2.32 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யூஸ்டன் குவா, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யுஜின் ஓர் என இரு வல்லுநர்களும் அவ்வாறு குறிப்பிட்டனர்.
புகைமூட்ட சூழலுடன் குறைவான நாள்களும் சராசரி காற்று மாசுபாட்டுக் குறியீட்டு அளவு குறைவாகவும் பதிவாகியிருந்த போதிலும், இவ்வாண்டுக்கான செலவுத் தொகை அதிகம் என்ற முடிவுக்குப் பேராசிரியர்கள் குவா, ஓர் இருவரும் வந்தனர்.
மக்கள்தொகை பெருக்கம், அதிக வருமானம், சுற்றுப்பயணிகளின் செலவினங்கள், புதுப்பிக்கப்பட்ட சுகாதாரத் தரவுகள் ஆகியவை அதற்குக் காரணம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
சிகிச்சைக் கட்டணங்கள் மட்டுமன்றி நோய் அபாயம், திடீர் மரணத்தைக் குறைப்பதற்கான மதிப்பையும் உள்ளடக்கிய சுகாதாரச் சுமை, 2015ஆம் ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமாக இருந்தது.
சுற்றுப்பயணிகளின் வருகை, அவர்களின் செலவினத் தரவுகளைக் கருத்தில் கொள்ளும்போது, நேரடி இழப்பு, கூடுதல் வணிக இழப்பு உள்ளிட்டவை 11 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை விட இந்த ஆண்டு அதிகமாகப் பதிவாகின.
நோய்வாய்ப்படுவதால் வேலை சார்ந்த அல்லது வேலை அல்லாத செயல்பாடுகளில் ஏற்படும் நேர இழப்பிலும் இந்தத் தாக்கம் வெளிப்படுகிறது.
முகக்கவசங்கள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான செலவும் மற்றொரு காரணியாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அது, 2015ஆம் ஆண்டின் அளவை விடக் குறைந்தது.
சுத்தமான காற்றுக்காக மக்கள் செலவிடத் தயாராக இருக்கும் மனப்பான்மையைக் கருத்தில் கொண்டு, மனித நலனும் அந்தக் கணக்கீட்டில் சேர்க்கப்பட்டது.
புகைமூட்டத்தால் ஏற்படும் இழப்புகளைக் கணக்கிடுவது அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்று பேராசிரியர்கள் குவாவும் ஓரும் சுட்டினர்.
மேலும், அந்தச் சுமையை யார் சுமக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது, சிங்கப்பூர் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துல்லியமாக இலக்கு வைக்கவும் தகவமைப்புத் திட்டங்களை வகுக்கவும் உதவும் என்றும் அவர்கள் கூறினர்.
