மருந்துப்பொருள் நிறுவன சர்ச்சை: $24.5 மில்லியன் இழப்பீடு வழங்க தீர்ப்பு

1 mins read
7b1d6244-5c58-42e2-949b-1d029bab92e4
கடந்த 2022ஆம் ஆண்டில் எல்ஏசி (LAC), ஜிஎன்சி (GNC) ஹோல்டிங்சுடனான அதன் ஒப்பந்தங்களை ரத்து செய்தது. அதையடுத்து சிங்கப்பூரில் உள்ள அனைத்து ஜிஎன்சி கடைகளையும் எல்ஏசி கடைகளாக மாறியது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உடல்நலப் பொருள்கள் விற்பனையாளரான ஜிஎன்சி ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கும் எல்ஏசி குளோபல் நிறுவனத்திற்கும் இடையிலான வழக்கில் சிங்கப்பூர் அனைத்துலக வணிக நீதிமன்றம் (எஸ்ஐசிசி) தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி, ஜிஎன்சி நிறுவனம் கோரும் பட்சத்தில், முன்னிருந்த கடைகளின் இருப்பிடங்கள் குறித்த பட்டியலையும் ஒப்பந்த ஆவணங்களையும் எல்ஏசி குளோபல் வழங்க வேண்டும். அத்துடன், $24.5 மில்லியனுக்கும் (US$18.9 மில்லியன்) அதிகமான தொகையை இழப்பீடாக வழங்குமாறும் எல்ஏசி குளோபல் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இரு நிறுவனங்களுக்கும் இடையே வர்த்தகப் பெயர் உரிமை தொடர்பில் மூன்று ஆண்டுகளாக சர்ச்சை நீடித்தது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஊட்டச்சத்து மருந்து சில்லறை விற்பனையாளரான ஜிஎன்சி உடனான தனது ஒப்பந்தங்களை எல்ஏசி தவறாக ரத்து செய்ததாக கண்டறியப்பட்டதன் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டதாக மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அக்டோபர் 21 தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

எல்ஏசி மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனமான ஓஎன்ஐ குளோபல் (ONI Global) ஆகியவை பிரபல ஓசிம் நிறுவனத்தின் நிறுவனரான திரு ரோன் சிம் என்பவருக்குச் சொந்தமான சொகுசு வாழ்க்கைப் பாணி, நலவாழ்வு நிறுவனமான V3 குழுமத்தின் ஒரு பகுதியாகும்.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எல்ஏசி நிறுவனம் முறையிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்