சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத்தின் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு நிலையம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது. சட்ட, உள்துறை இரண்டாம் அமைச்சர் எட்வின் டோங் விளையாட்டு நிலையத்தைச் சனிக்கிழமை (பிப்ரவரி 14) திறந்துவைத்தார்.
மறுசீரமைக்கப்பட்ட காற்பந்துத் திடல்கள், புதிய வசதிகள் கொண்ட ரக்பி மைதானம் ஆகியவை விளையாட்டு நிலையத்தின் சிறப்பம்சங்கள்.
மேம்பாட்டுப் பணிகளுக்குக் கிட்டத்தட்ட $6.5 மில்லியன் செலவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார் சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மாதவன் தேவதாஸ்.
மறுசீரமைக்கப்பட்ட விளையாட்டு நிலையத்தில் புதிய பலபயன் அரங்கமும் முழு அளவில் போட்டிகளை நடத்துவதற்கான கூடைப்பந்து, டென்னிஸ் மைதானங்களும் உள்ளன.
டெம்சியில் உள்ள இடத்தைச் சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம் சிங்கப்பூர் நில ஆணையத்திடமிருந்து 2008ஆம் ஆண்டு குத்தகைக்கு எடுத்தது. சங்கத்தின் பாடாங் திடல் தேசிய நிகழ்ச்சிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டதால் வேறு இடம் தேவைப்பட்டது.
டெம்சி திடலில் பல 25, 30 ஆண்டுகளுக்குமுன் காற்பந்தாட்டம் விளையாடியதை நினைவுகூர்ந்த திரு எட்வின் டோங், குண்டும் குழியுமாக இருந்த இந்த இடம் இப்போது பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளதை மெச்சினார்.
மறுமேம்பாட்டுப் பணிகள் சங்கம் விளையாட்டுத் துறைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் திரு டோங் சொன்னார்.
டெம்சி திடலில் கிரிக்கெட்டுக்கும் ரக்பிக்குமான தேசிய பள்ளி விளையாட்டுகளுடன் தேசிய காற்பந்தாட்ட லீக்கும் தேசிய கிரிக்கெட் லீக்கும் இடம்பெறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர்க் கிரிக்கெட் சங்கத்தின்கீழ் உள்ள இளையர் மேம்பாட்டுத் திட்டத்தில் உள்ள ரக்பி, கிரிக்கெட், ஹாக்கி, காற்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுப் பயிற்சிகளில் 1,000க்கும் அதிகமான பிள்ளைகள் சேர்ந்துள்ளனர்.
மேம்படுத்தப்பட்ட விளையாட்டு நிலையத்தில் உள்ள வசதிகள் உறுப்பினர்களுக்கும் விளையாட்டு ஆர்வலர்களுக்கும் தொடர்ந்து பல்வேறு சேவைகளை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாகத் திரு டோங் குறிப்பிட்டார்.

