ஜனவரி 5: 2100ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் கூடலாம். படிம எரிபொருள்களைக் கட்டுப்பாடு இன்றிப் பயன்படுத்தினால் இந்த நிலை ஏற்படக்கூடும் என்று சிங்கப்பூர்ப் பருவநிலை ஆய்வு நிலையம், அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
பிப்ரவரி 28: சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் முதன்முறையாக ஒன்றுக்குக் கீழ் குறைந்து 0.97 ஆகியுள்ளதை பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மார்ச் 2: பிரபல அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்ட்டின் இசைநிகழ்ச்சிகள் சிங்கப்பூரில் நடைபெற்றன. மார்ச் 2ஆம் தேதிக்கும் 9ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அவர், தேசிய விளையாட்டரங்கில் ஆறு இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
மார்ச் 26: அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள பாலத்தை ‘டாலி’ என்ற சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்தது. அறுவர் உயிர் இழந்தனர். அக்கப்பலின் உரிமையாளர் கிரேஸ் ஓஷியா பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் கப்பலை இயக்கும் நிர்வாகப் பொறுப்பிலுள்ள சினர்ஜி மரின் குழுமமும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டவை.
ஏப்ரல் 2: சிங்கப்பூருக்காக ஒலிம்பிக் போட்டிகளில் தங்க விருது பெற்ற ஜோசஃப் ஸ்கூலிங், நீச்சலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மே 15: சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக 52 வயது பொருளியலாளரான லாரன்ஸ் வோங் பதவியேற்றார்.
மே 24: எஸ்கியூ321 சேவை எண் கொண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்தபோது திடீரென்று ஆட்டங்கண்டதை அடுத்து பயணி ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.
ஜூன் 14: பாசிர் பாஞ்சாங் கப்பல் முனையத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் சிங்கப்பூர் கடற்கரைகள் மாசுபட்டு, பொதுமக்களுக்கு 3 மாதங்கள் வரை மூடப்பட்டன. நெதர்லாந்தைச் சேர்ந்த வோக்ஸ் மேக்சிமா, சிங்கப்பூரைச் சேர்ந்த மரின் ஹானர் ஆகிய இரு கப்பல்களும் ஒன்றோடு ஒன்று மோதியதில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆகஸ்ட் 9: பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அலையாடல் (Kitefoiling) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் சிங்கப்பூரின் 17 வயது மேக்சிமிலியன் மெய்டர். சிங்கப்பூருக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களில் இவர்தான் ஆக இளையவர்.
ஆகஸ்ட் 18: தேசிய தினப் பேரணி உரையில் வேலையை இழந்தோருக்கு ஆறு மாதங்கள் வரை $6,000 வரையிலான ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ நிதியுதவியை பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.
கல்வித் துறையிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. 40 ஆண்டுகள் நடப்பிலிருந்த மீத்திறன் திட்டம் மறுசீரமைப்பு, அதிக மாணவர்கள் இரண்டாம் மொழியை உயர்நிலையில் படிக்க வாய்ப்பு போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. புதிதாகப் பிள்ளை பெறுவோருக்குக் கூடுதலாக, சம்பளத்துடன் கூடிய 10 வார மகப்பேறு விடுப்பும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து, தந்தையர்களுக்கான நான்கு வார கட்டாய மகப்பேறு விடுப்பும் அறிவிக்கப்பட்டன.
செப்டம்பர் 11: கத்தோலிக சமயத்தலைவர் போப் பிரான்சிஸ், சிங்கப்பூரில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். தேசிய விளையாட்டரங்கில் கூட்டுப் பிரார்த்தனையை நடத்தியதுடன் கத்தோலிக்க தொடக்கக்கல்லூரியில் சமய நல்லிணக்கக் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
அக்டோபர் 4: முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு, விலைமதிப்புள்ள பொருள்களை அன்பளிப்பாகப் பெற்ற குற்றத்தின்பேரில் 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அக்டோபர் 5: கிராஞ்சியில் உள்ள சிங்கப்பூர் குதிரைப் பந்தயக் கழகத்தின் இறுதிப் பந்தயத்தைக் காண ஆயிரக்கணக்கானோர் கூடினர்.குதிரைப் பந்தயத்திற்கு சிங்கப்பூர் விடைகொடுத்தது. அந்த இடம் வீடமைப்புக்கு வழிவிட்டது.
அக்டோபர் 25: பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவினரிடம் பொய்யுரைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். அந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு, வரும் பிப்ரவரி 17ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது.
நவம்பர் 27: இந்தியக் குழலிசைக் கலைஞரான முனைவர் கானவினோதன் ரத்னத்திற்கு சிங்கப்பூரின் உயரிய கலை, இலக்கிய விருதான கலாசாரப் பதக்கம் வழங்கப்பட்டது.
டிசம்பர் 4: பிரதமர் லாரன்ஸ் வோங் மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றார். அப்பதவியிலிருந்து விலகிய மூத்த அமைச்சர் லீ சியன் லூங், புதிய செயற்குழுவில் இடம்பெற்றுள்ளார்.
டிசம்பர் 7: சிங்கப்பூரின் வெப்பநிலை ஆக அதிகமாக 36.2 டிகிரி செல்சியஸ் பதிவானது.
டிசம்பர் 11: சிங்கப்பூரில் நடந்த அனைத்துலக சதுரங்கப் போட்டியில், உலக சதுரங்க வெற்றியாளராக வாகை சூடி வரலாறு படைத்தார் இளம் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் தொம்மராஜு, 18.
டிசம்பர் 19: கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் ‘ஏக்ரா’ (Accounting and Corporate Regulatory Authority’s (Acra)) தளத்தில் தனிநபர்களின் அடையாள அட்டை எண்களைப் பெற முடிவது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். இந்த விவகாரத்தின் தொடர்பில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அரசாங்கம் மன்னிப்புக்கேட்டது.