சிங்கப்பூர்ப் பொருள்களுக்கு அமெரிக்கா வரி விதித்திருப்பது குறித்துச் சிங்கப்பூர் அதிருப்தி அடைந்திருப்பதாகத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் வியாழக்கிழமை (ஏப்ரல் 3) கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலப் பொருளியல் உறவுகள் நிலவுவதையும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடப்பில் உள்ளதையும் அவர் சுட்டினார்.
மேலும், அமெரிக்கா எவ்வாறு வரிகளைக் கணக்கிட்டது என்றும் 10 விழுக்காட்டு அடிப்படை வரி விதிக்கப்பட்டதன் பின்னணியில் கருத்து வேறுபாடு ஏதும் உள்ளதா என்றும் தெளிவுபடுத்தும்படி சிங்கப்பூர் கேட்டறியும் என்று திரு கான் கூறினார்.
“அமெரிக்கா-சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமான ஒப்பந்தமாகும். அது குறிப்பிடத்தக்க வகையில் அமெரிக்காவுக்கு நன்மையளித்துள்ளது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், கடந்த 20 ஆண்டுகளாகச் சிங்கப்பூருக்கு இறக்குமதியாகும் அமெரிக்கப் பொருள்களுக்கு வரி ஏதும் விதிக்கப்படுவதில்லை. அத்துடன், சிங்கப்பூருடனான வர்த்தகத்தில் $30 பில்லியன் வரையிலான வர்த்தக உபரி அமெரிக்காவுக்குக் கிட்டியுள்ளது,” என்று துணைப் பிரதமர் விளக்கினார்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் இதற்குச் சட்டபூர்வமாக இழப்பீடு கோரவோ பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளவோ சர்ச்சைக்குத் தீர்வுகோரவோ முடியும் என்றார் அவர்.
“இருப்பினும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம். ஏனெனில் பதிலுக்கு அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரி விதிப்பதால் அங்கிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருள்களுக்குக் கூடுதல் செலவிட நேரிடும் என்பதுடன் நம் பயனாளர்களும் நிறுவனங்களும் அதனால் பாதிக்கப்படுவர்,” என்று திரு கான் கூறினார்.
இந்த ஆண்டுக்கான (2025) வளர்ச்சி முன்னுரைப்பைச் சிங்கப்பூர் மீண்டும் மதிப்பீடு செய்வதாகக் கூறிய அவர், தேவைப்பட்டால் குடும்பங்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆதரவு வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
அதேவேளையில், இதர வர்த்தகப் பங்காளித்துவ நாடுகளுடன், குறிப்பாக ஆசியான் நாடுகளுடன் இணைந்து ஒருங்கிணைப்பை மேலும் வலுவாக்குவது தொடர்பில் சிங்கப்பூர் பணியாற்றும் என்றார் துணைப் பிரதமர்.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள மூத்த அமைச்சர் லீ சியன் லூங், துணைப் பிரதமர் கான் கூறிய கருத்துகளை ஆமோதித்தார். மேலும், இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் இப்போதைக்குப் போதிய ஆதரவை வழங்குவதாக அவர் கூறினார்.
பிரதமர் லாரன்ஸ் வோங்கும் அவரது குழுவினரும் நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து, தேவைப்பட்டால் உதவி வழங்கத் தயாராக இருப்பர் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.