ஜப்பானின் யென் நாணயத்துக்கு எதிரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஒரு வெள்ளி, 120க்கும் அதிக யென் மதிப்பைப் பெற்றுள்ளது. அதன் காரணமாக அதிகமானோர் நாணய மாற்று வணிகர்களிடம் சென்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
வியாழக்கிழமை (நவம்பர் 20) மாலை நிலவரப்படி புதன்கிழமை (நவம்பர் 19) மாலையிலிருந்து வெள்ளிக்கு எதிரான யென்னின் மதிப்பு தொடர்ந்து 120ஐத் தாண்டியபடி இருந்தது என புளூம்பர்க் நாணயப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக, யென்னுக்கு எதிரான வெள்ளியின் மதிப்பு கட்டங்கட்டமாக அதிகரித்துள்ளது. இது, உள்ளூர் நாணய மாற்று வணிகர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
‘தி ஆர்க்கேட்’ (The Arcade) நிலையத்தில் ‘கிரெளன் எக்சேஞ்ச்’ (Crown Exchange) நாணய மாற்றுக் கடையை நடத்தும் தமிம் ஏ.கே., தனது வர்த்தகம் சூடுபிடித்திருப்பதாகவும் வியாழக்கிழமையன்று பத்து வாடிக்கையாளர்களில் நால்வர் யென் நாணயத்தை வாங்கியதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்சிடம் தெரிவித்தார்.
அத்தகைய ஒவ்வொரு வாடிக்கையாளரும் 2,000லிருந்து 3,000 வெள்ளி வரையிலான தொகைக்கு நிகரான யென் நாணயத்தை வாங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

