சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் வழியாக மலேசியாவிற்குள் நுழையும் வெளிநாட்டு வாகனங்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் (விஇபி) வாகன நுழைவு அனுமதியைப் பெற்றிருப்பது கட்டாயம் என்று மலேசிய அரசாங்கம் கடந்த மே மாதம் அறிவித்து இருந்தது.
இருப்பினும், கெடுவுக்குப் பின்னரும் விஇபி அனுமதி அட்டை பெறாத சிங்கப்பூர் வாகனங்கள் மலேசியாவிற்குள் நுழையலாம் என செப்டம்பர் 27ஆம் தேதி மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை அறிவித்தது.
ஆனால், அவர்களுக்கு மலேசிய சோதனைச்சாவடிகளில் அனுமதி அட்டைப் பெற நினைவூட்டல்கள் வழங்கப்படும் என்றும் அது சொன்னது.
விஇபி அனுமதி அட்டைக்கு இன்னும் பதிவு செய்யவில்லையென்றால், அதுகுறித்து கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் ஏற்கெனவே பதிவு செய்திருந்தால் அல்லது ஆர்எஃப்ஐடி குறியீட்டைச் செயல்படுத்தியிருந்தால், அக்டோபர் 1 ஆம் தேதி மலேசியாவிற்குச் செல்வதற்குமுன் கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் குறித்தும் இங்கே அறிந்துகொள்ளலாம்.
1. ஆர்எஃப்ஐடி குறியீட்டைச் செயல்படுத்துதல்
vepams.jpj.gov.my எனும் இணையவாசலில் உங்கள் பயனர் தகவலைப் பயன்படுத்தி உள்ளீடு செய்து தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ‘ஆர்எஃப்ஐடி குறியீடு’ செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
2. டச் ‘அண்ட் கோ கணக்கை இணைத்தல்
நீங்கள் டச் ‘அண்ட் கோ செயலியைப் பதிவிறக்கம் செய்து அதைச் செயல்படுத்தியிருப்பீர்கள் என நம்புகிறோம். ஆர்எஃப்ஐடி குறியீடு இந்தச் செயலியின் ‘இ வாலட்’ உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, மலேசியாவில் சுங்கக் கட்டணத்தையும் சாலைக் கட்டணங்களையும் நீங்கள் செலுத்த முடியும்.
3. மலேசிய சோதனைச் சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்துதல்
இதற்கு முன்னர், சுங்கக் கட்டணங்களைச் செலுத்த குடிநுழைவுச் சாவடியில் உள்ள வருடிகளில் உங்கள் ‘டச் அண்ட் கோ’ அட்டையை வருடுவீர்கள். ஆனால், தற்போது ஆர்எஃப்ஐடி குறியீட்டுடன் இணைக்கப்பட்டுள்ள டச் ‘அண்ட் கோ செயலியின் ‘இ வாலட்’ மூலம் சுங்கக் கட்டணம் செலுத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
நீங்கள் செலுத்திய சுங்கக் கட்டணங்கள் குறித்த விவரங்களைச் செயலியில் உள்ள “பரிவர்த்தனைகள்” என்னும் தாவலைச் சொடுக்கி அறிந்துகொள்ளலாம்.