சிங்கப்பூர் பொருளியல் கடந்த ஆண்டு, கணிப்பையும் மீறி 4.4 விழுக்காடு வளர்ச்சி கண்டதாக வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்து உள்ளது.
2024ஆம் ஆண்டு பொருளியல் வளர்ச்சி விகிதம் 4 விழுக்காடாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டதைக் காட்டிலும் வேகமான வளர்ச்சி பதிவாகி உள்ளதாக அது தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
குறிப்பாக, 2024 நான்காம் காலாண்டில், ஆண்டுக்காண்டு அடிப்படையிலான வளர்ச்சி 5 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. அதன் தொடக்க மதிப்பீடு 4.3 விழுக்காடாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
கடந்த ஆண்டின் வளர்ச்சி வேகமடைந்து இருப்பினும், நடப்பாண்டில் 1 விழுக்காட்டுக்கும் 3 விழுக்காட்டுக்கும் இடையில் மெதுவான வளர்ச்சியே இருக்கும் என்று அமைச்சு இதற்கு முன்னர் கணித்ததில் மாற்றமில்லை.
புவிசார் அரசியல் பூசல்கள், புதிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்க வர்த்தகக் கொள்கைகள் மீதான நிச்சயமற்ற போக்கு ஆகியன அதிகரிப்பதால் அந்த முன்னுரைப்பை அமைச்சு வெளியிட்டு இருந்தது.
“உலகப் பொருளியலில் நிச்சயமற்ற போக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் நீடிப்பதால், குறைவான வளர்ச்சிக்குரிய இடர்ப்பாடுகள் உள்ளன.
“அமெரிக்கப் பொருளியல் நிலவரம் அதன் புதிய நிர்வாகத்தின் கொள்கைகளைச் சார்ந்தே உள்ளது என்பதால் நிச்சயமற்ற தன்மை அதிகமாகக் காணப்படுகிறது,” என்று அமைச்சு தெரிவித்து உள்ளது.
ஆக அண்மையில், வியாழக்கிழமை (பிப்ரவரி 13) திரு டிரம்ப் வெளியிட்ட உத்தரவில், அமெரிக்காவுக்கான எல்லா இறக்குமதிகளுக்கும் இருதரப்பு வரி விதிப்பதற்கான திட்டங்களை வகுக்குமாறு தமது அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
அவர் ஏற்கெனவே சீன இறக்குமதிப் பொருள்களுக்கான வரியை 10 விழுக்காடு அதிகரித்துள்ளார். மேலும், எல்லா உலோகம் மற்றும் அலுமினிய இறக்குமதிக்கும் திரு டிரம்ப் 25 விழுக்காடு வரி விதித்துள்ளார்.
அந்த நிலவரத்தைக் குறிப்பிட்டுள்ள அமைச்சு, “இவ்வாறு பெரும் பொருளியல் நாடுகளுக்கு இடையில் நிலவும் வர்த்தக மோதல்களோடு புவிசார் அரசியல் பதற்றங்களும் அதிகரிப்பதால் உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும்.
“ஆகப்பெரிய உலகப் பொருளியல் கொள்கையின் நிச்சயமற்ற போக்கால் உலக முதலீடுகள், வர்த்தகம், உலக நாடுகளின் வளர்ச்சி ஆகியன பாதிக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளது.

