தென்கிழக்காசிய வட்டாரத்தின் ஆகப் பெரிய பங்குச் சந்தை என்ற பெருமையைப் பெற்றிருந்த இந்தோனீசியா, இப்போது அதனைச் சிங்கப்பூரிடம் பறிகொடுத்துவிட்டது.
இந்தோனீசியப் பங்குச் சந்தைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் மொத்தச் சந்தை மூலதன மதிப்பு, இவ்வாண்டு ஜனவரியில் இருந்ததைவிட 30 விழுக்காடு சரிந்து, 618 பில்லியன் டாலருக்குக் (S$793 பில்லியன்) குறைந்துவிட்டது.
அதே நேரத்தில் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் மொத்தச் சந்தை முதலீட்டு மதிப்பு 645 பில்லியன் டாலராக உயர்ந்துவிட்டது என்று புளூம்பெர்க் தரவுகள் கூறுகின்றன.
பொருளியல், அரசியல் நிலைத்தன்மையாலும் அரசாங்கம் முன்னெடுத்த பங்குச் சந்தைச் சீர்திருத்த நடவடிக்கைகளாலும் சிங்கப்பூர்ப் பங்குகள் பலனடைந்துள்ளன.
ஈரான் போரால் நிலவும் ஏற்ற இறக்கம் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பானவற்றில் முதலிட்டு வருகின்றனர். இதனால், கடந்த வாரத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு முன்னில்லாத அளவிற்கு உயர்ந்தது.
நடப்பு 2026ஆம் ஆண்டில் இந்தோனீசியப் பங்குகளைவிட சிங்கப்பூர்ப் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
சிங்கப்பூர் நாணய மதிப்பும் வலுவாக உள்ளதால் சந்தையில் அதிகத் தொகை முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கலாம் என்று ஓசிபிசி வங்கியின் பங்கு ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் கார்மன் லீ கூறியிருக்கிறார்.

