பத்து ஆண்டுகளுக்குமேலாக சிங்கப்பூரைச் சுற்றியுள்ள நீரின் தரத்தைக் கண்காணித்துவரும் கரையோரக் கண்காணிப்புக் கட்டமைப்பு மேம்பாடு காணவிருக்கிறது.
கதிர்வீச்சையும் அலைகளையும் அளவிடும் உணர்கருவிகள் அதில் பொருத்தப்படவிருக்கின்றன.
தற்போதைய ‘நெப்டியூன்’ கட்டமைப்பு சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடற்பரப்பைக் கண்காணிப்பதால் எண்ணெய்க் கசிவு போன்ற நீர் மாசடையும் சம்பவங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய கடற்பாசி படர்தல் போன்ற சம்பவங்களுக்கும் அதிகாரிகள் விரைவாகத் தீர்வுகாண முடிகிறது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த தேசியச் சுற்றுப்புற வாரியம், கண்காணிப்புத் திறன்களை மறுஆய்வு செய்து, விரிவுபடுத்த வேண்டிய நேரம் இது என்று கூறியது.
இயற்பியல், வேதியியல், உயிரியல் ரீதியில் மட்டுமன்றி கதிர்வீச்சு போன்றவற்றின் அடிப்படையிலும் தண்ணீரின் தர அளவீடுகளைக் கணக்கிட வேண்டியிருப்பதை அது சுட்டியது.
2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து முழுமையாகச் செயல்பட்டுவரும் ‘நெப்டியூன்’ கட்டமைப்பில் எட்டு மிதவைக் கண்காணிப்பு நிலையங்கள் உள்ளன. 11வது ஆண்டாக சிங்கப்பூர் நீரிணை, ஜோகூர் நீரிணை ஆகியவற்றில் அவை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நீர் மாசடைவதைக் கண்காணிப்பது மட்டுமன்றி, நீண்டகால அடிப்படையில் அதன் தரத்தை ஆய்வு செய்வதும் தரத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் என்பதை முன்கூட்டியே எச்சரிப்பதும் அதன் பணிகளில் அடங்கும்.
ஒவ்வொரு மிதவையும் தண்ணீரின் தரத்தைத் தொடர்ச்சியாகச் சோதித்து, நிகழ்நேர முடிவுகளை தேசியச் சுற்றுப்புற வாரியத்துக்கு அனுப்புகிறது. நீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனின் அளவு, காற்றின் திசை, நீர்ச் சுழலில் வேகம் போன்றவற்றை அது கணக்கிடுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மேம்பாட்டுப் பணிகளின்கீழ் புதிய உணர்கருவிகள் பொருத்தப்பட்டால் அலைகளின் உயரம், அலை எழும்பித் தணிந்து மீண்டும் எழும்பும் கால இடைவெளி (Wave period), தண்ணீரில் கதிர்வீச்சின் அளவு போன்றவற்றைக் கணக்கிட முடியும்.
அந்த உணர்கருவிகளில் கடற்பாசி, செடிகள், சிறிய கடல்வாழ் உயிரினங்கள் போன்ற உயிரியல் மாசு படியாமலிருக்கும் வண்ணம் அறிவார்ந்த தானியக்கத் துப்புரவு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பின் மூலம் திரட்டப்படும் தரவுகள் சிங்கப்பூர்க் கடல்நீரின் வெப்பநிலை, அதில் காணப்படும் உப்பு, அமிலம், ஊட்டச்சத்துகள் போன்றவற்றை அளவிட உதவும்.
மலேசியா, இந்தோனீசியா உட்பட ஆசியானின் ஐந்து நாடுகள் அவற்றின் எரிசக்தித் தேவையை ஈடுகட்ட அணுசக்தித் தொழில்நுட்பத்தின் சாத்தியத்தை ஆராயும் நிலையில் இத்தகைய கட்டமைப்பின் முக்கியத்துவத்தைக் கவனிப்பாளர்கள் வரவேற்கின்றனர்.