பயனீட்டாளர்களும் வணிகங்களும் இன்னும் எளிய முறையில் பரிவர்த்தனை செய்வதில் கூடுதல் தெளிவையும் சட்டபூர்வ உறுதித்தன்மையையும் வழங்க சிங்கப்பூரும் ஐரோப்பிய ஒன்றியமும் புதன்கிழமை (மே 7) மின்னிலக்க வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கிரேஸ் ஃபூவும் வர்த்தக, பொருளியல் பாதுகாப்புக்கான ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் மார்க்கோஸ் செஃப்கோவிச்சும் சிங்கப்பூர் நிதி அமைச்சு வளாகத்தில் அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
கடந்த 2019ல் நடப்புக்கு வந்த ஐரோப்பிய ஒன்றியம்-சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக உடன்பாட்டிற்கு இந்த உடன்பாடு துணைபுரிகிறது.
மின்னிலக்க வர்த்தக, எல்லை தாண்டிய தரவுப் பரிமாற்றத்துக்கு உலகளாவிய தரநிலைகளை நிர்ணயிப்பதை இந்த உடன்பாடு இலக்காகக் கொண்டுள்ளது. மின்கையெழுத்து, இணையப் பாதுகாப்பு தொடர்பிலான விதிகளை இது உள்ளடக்குகிறது. வணிகங்களுக்கான செலவினங்களைக் குறைத்து, சேவை வணிகத்தை இது மேம்படுத்தும்.
சிங்கப்பூர் ஐந்தாவது பெரிய வணிகப் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம் விளங்குகிறது. 2024ல் இருதரப்பு வணிகம் $100 பில்லியனுக்குமேல் வளர்ச்சி கண்டது. சிங்கப்பூரின் மொத்த பொருள் வணிகத்தில் இது 7.8 விழுக்காடு பங்கு வகிக்கிறது.
சிங்கப்பூரின் இரண்டாவது பெரிய சேவை வணிகப் பங்காளியாகவும் ஐரோப்பிய ஒன்றியம் திகழ்கிறது. 2023ல் சேவைகளில் இருதரப்பு வணிகம் $110 பில்லியனைத் தாண்டியது.
முதலீட்டு உறவுகள் தொடர்ந்து துடிப்புடன் உள்ளன. சிங்கப்பூரின் இரண்டாவது பெரிய அந்நிய முதலீட்டாளராகவும் இரண்டாவது பெரிய வெளிநாட்டு முதலீட்டு இடமாகவும் ஐரோப்பிய ஒன்றியம் விளங்குகிறது.
சேவை வணிகத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐந்தாவது பெரிய பங்காளியாக சிங்கப்பூர் திகழ்கிறது. இச்சேவைகளில் பாதிக்கும் மேற்பட்டவை மின்னிலக்க ரீதியாக வழங்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே மின்னிலக்கப் பொருளியல் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்த உடன்பாட்டுக்கான கையெழுத்து ஒரு முக்கியப் படி என்று அமைச்சர் ஃபூ கூறினார்.
2023ல் உலகளாவிய மின்னிலக்கச் சேவை ஏற்றுமதிகள் US$4.2 டிரில்லியனைத் (S$5.42 டிரில்லியன்) தாண்டியதை உலக வர்த்தக அமைப்பைச் சேர்ந்த தரவு காட்டியது. 2022ல் இருந்ததைவிட இது 9 விழுக்காடு அதிகம்.
இதற்கிடையே, மின்னிலக்க வணிகத் தளத்தில் பங்கேற்க சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதில் சிங்கப்பூரும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒத்துழைக்கவுள்ளன.