31வது ஐக்கிய நாட்டு நிறுவன (ஐநா) பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் சில நாடுகளுடன் கரிமச் சந்தை ஒத்துழைப்பை விரிவுபடுத்திவரும் சிங்கப்பூர், திங்கட்கிழமை (நவம்பர் 16) கென்யாவுடன் கரிம ஊக்கப் புள்ளி ஒத்துழைப்புக்கான செயலாக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அது கொலம்பியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் புதுப்பித்துள்ளது. மாநாடு நடைபெற்ற இடத்தில் உள்ள சிங்கப்பூர் அரங்கில் கையெழுத்து நிகழ்வு நடைபெற்றது.
சிங்கப்பூர் கடந்த 2022ஆம் ஆண்டில் கரிம ஊக்கப் புள்ளி வர்த்தகம் தொடர்பான தனது முதல் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டது. அப்போதிலிருந்து, அது 30க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸ் உடன்படிக்கையின் 6வது பிரிவின்கீழ், உரிய மாற்றங்களுடன் உயர்தரக் கரிம ஊக்கப் புள்ளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டபூர்வ இருதரப்புக் கட்டமைப்பைக் கென்யாவுடனான இந்தச் செயலாக்க ஒப்பந்தம் அமைக்கிறது என்று எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டுமுதல், நிறுவனங்கள் தங்களின் கரிம ஊக்கப் புள்ளித் திட்டங்களை அரசாங்கத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரிம ஊக்கப் புள்ளி ஒத்துழைப்பு தொடர்பாகச் சிங்கப்பூர் கையெழுத்திட்டுள்ள 13வது செயலாக்க ஒப்பந்தம் இது. மேலும், கானா, ருவாண்டாவைத் தொடர்ந்து ஆப்பிரிக்க நாடு ஒன்றுடன் சிங்கப்பூர் மேற்கொள்ளும் மூன்றாவது ஒப்பந்தமும் இது.
நிகழ்வில் உரையாற்றிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, “உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் நாம் கூடியுள்ளோம். இருப்பினும், பருவநிலை மாற்றம் தொடர்பான நமது கடப்பாட்டில் சிங்கப்பூர் தொடர்ந்து நிலையாக உள்ளது. எந்தவொரு நாட்டாலும் பருவநிலை மாற்றத்தைத் தனித்து எதிர்கொள்ள முடியாது,” என்று கூறினார்.
பொதுவான குறிக்கோள்களைக் கொண்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவது சிங்கப்பூருக்கு மனநிறைவைத் தருவதாகத் திருவாட்டி ஃபூ குறிப்பிட்டார். பசுமை மாற்றத்தில் குறிப்பிடத்தக்க தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியதற்காக அவர் கென்யாவுக்குப் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
