தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலையில் வனவிலங்கு அடிபடுவதைத் தடுக்க கூடுதல் வேலிகள்

1 mins read
16ca2749-d18d-4513-8510-70fa249d85ed
வேலிகள் எழுப்பப்பட்ட இடங்களில் வனவிலங்குகள் வாகனங்களால் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் குறைந்திருப்பதாகத் தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்தது.  - படம்: டெஸ்மண்ட் லீயின் ஃபேஸ்புக் பக்கம்

வனவிலங்குகளை வாகனங்கள் மோதுவதைத் தடுக்கும் பொருட்டு, சிங்கப்பூரில் கூடுதலாக ஒன்பது இடங்களில் வேலிகள் எழுப்பப்படும்.

புக்கிட் தீமா, மத்திய நீர்ப்பிடிப்புப் பகுதி போன்ற பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பகுதிகளுக்கு அருகிலுள்ள பெருஞ்சாலைகள் வழியாகப் புதிய வேலிகள் கட்டப்படும் என்று தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.

வேலிகள் எழுப்பப்பட்ட இடங்களில் வனவிலங்குகள் வாகனங்களால் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் குறைந்திருப்பதாகவும் கழகம் கூறியுள்ளது.

முள்ளம்பன்றி, கடமான் (sambar deer) ஆகிய வனவிலங்குகள் மோதப்பட்டு மடியும் சம்பவங்களின் எண்ணிக்கை, 2023ல் பதிவான ஆறிலிருந்து 2024ல் இரண்டுக்குக் குறைந்துள்ளது.

வனவிலங்குகளுக்கும் வாகனங்களுக்கும் இடையிலான இத்தகைய விபத்துகள், ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் மட்டுமின்றி வனவிலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ திங்கட்கிழமை (ஏப்ரல் 14) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

வேலிகளால் வனவிலங்குகளின் மரண எண்ணிக்கை குறைந்திருப்பது ஊக்கமளிப்பதாகத் திரு லீ சொன்னார்.

1.8 மீட்டர் உயரமுள்ள இந்த வேலிகள் பெரிய விலங்குகள் கடந்து செல்வதைத் தடுக்கின்றன. இவை, கட்டங்கட்டமாக அமைக்கப்படும்.

இந்தப் பணித்திட்டத்தை 2026க்குள் நிறைவுசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

காடுகள் சுற்றியுள்ள சாலை வழியாக ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களைப் பாதுகாப்புடன் ஓட்டும்படி திரு லீ அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

2024ல் மண்டாய் ரோட்டில் இரண்டு கடமானங்கள் வாகனங்களால் மோதப்பட்டு மாண்டன.

குறிப்புச் சொற்கள்