சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான ஏற்றுமதி 1% முதல் 3% வரை இருக்கும் என கணிப்பு

2 mins read
f9c838d8-9830-4f9c-96d1-cdd9115f658b
வர்த்தகம், வரி தொடர்பான விவகாரங்கள் உலகளாவிய முன்னேற்றத்தில் தொய்வை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதால் ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என முன்னுரைக்கப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஹ்

சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான ஏற்றுமதி 1 விழுக்காடு வரை இறங்கக்கூடும் என்றும் அதிகபட்சமாக 3 விழுக்காடு வரை வளரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

வர்த்தகம் மற்றும் வரி தொடர்பான விவகாரங்கள் உலகளாவிய முன்னேற்றத்தில் தொய்வை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதால் ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எண்ணெய் சாரா ஏற்றுமதி Nodx இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் 3.3 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்தது. 2024 இறுதிக் காலாண்டில் அடைந்த 2.4 விழுக்காட்டைக் காட்டிலும் அது அதிகமான வளர்ச்சி.

இந்நிலையில், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வியாழக்கிழமை (மே 22) அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அமெரிக்க-சீன வர்த்தகப் பதற்றம் தணிந்துவிட்டபோதிலும் வரி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள 90 நாள் கெடு முடிவடையும் நிலையில், வளர்ச்சியில் அதிக வீழ்ச்சி ஏற்படும் சாத்தியம் இருப்பதாக அது அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளின் தேவை, எதிர்பார்க்கப்படுவதைக் காட்டிலும் பலவீனம் அடைவதும் முக்கியமான உற்பத்திப் பொருள்களுக்கான தேவை மட்டுப்படுவதும் அவற்றில் அடங்கும் என்றது அமைப்பு.

வரி மற்றும் வர்த்தகக் கொள்கையில் நிலவும் நிச்சயமற்ற போக்கால் இவ்வாண்டிற்கான வெளிப்புறக் கண்ணோட்டம் பலவீனமடைந்திருந்தாலும் அது வளர்ச்சி ஆதரவாகவே தொடருகிறது என்றும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் குறிப்பிட்டு உள்ளது.

இவ்வாண்டின் உலகப் பொருளியல் நிலவரம் 2.8 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று அனைத்துலகப் பண நிதியம் எதிர்பார்க்கிறது. அந்த வளர்ச்சி அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம்-27 ஆகிய சிங்கப்பூரின் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளிடமும் காணப்படும் என்றும் அது எதிர்பார்க்கிறது.

அத்துடன், ஆசியான்-5 என்று அழைக்கப்படும் இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகியவற்றின் வளர்ச்சியும் அந்த 2.8 விழுக்காட்டு உலக வளர்ச்சியில் அடங்கும் என கணிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்