பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சிங்கப்பூரில் உணர முடிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் அபாயகரமான வெப்ப அலை வீசியதாகவும் இது வழக்கநிலையைவிட ஏறத்தாழ 122 நாள்கள் அதிகம் என்றும் விஞ்ஞானிகள் கூறினர்.
பருவநிலை மாற்றமில்லாது, ஓராண்டில் ஏறத்தாழ நான்கு நாள்களில் மட்டுமே இந்நிலை ஏற்படும் என்று டிசம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1991ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஆக அதிக வெப்பநிலை கொண்ட நாள்களுக்கான பட்டியலில் முதல் 10 விழுக்காடு நாள்களின் சராசரி வெப்பநிலையைவிட அதிகமாக இருந்தால் அது அபாயகரமான வெப்பமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது
இதுதொடர்பாக ‘வோர்ல்டு வெதர் அட்ரிபியூஷன் மற்றும் கிலைமட் சென்ட்ரல்’ எனும் லாபநோக்கம் இல்லா அமைப்பு ஆய்வு நடத்தி, அறிக்கையை வெளியிட்டது.
வெப்ப அலைகள் இயற்கையாக நிகழக்கூடியவை.
ஆனால் பருவநிலை மாற்றம் அவற்றை மேலும் மோசமாக்குகிறது.
புதைபடிவ எரிபொருள்களை எரிப்பது போன்ற நடவடிக்கைகளால் பூமியைச் சூடாக்கக்கூடிய எரிவாயுகள் வெளிப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
ஆந்த ஆய்வை நடத்தியவர்கள் 220 நாடுகளின் வெப்பநிலைத் தரவுகளைப் பயன்படுத்தினர்.
ஒவ்வொரு நாட்டின் வெப்பநிலை ஒப்பிடப்பட்டது.
2024ஆம் ஆண்டில் தென்கிழக்காசியாவின் சராசரி வெப்பநிலை 27.4ஆகப் பதிவானது.
1991ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தைவிட இது 0.8 விழுக்காடு அதிகம்.
“சிங்கப்பூருக்கென்றே தனித்துவம்வாய்ந்த பருவநிலை உள்ளது. எனவே, உலகளாவிய நிலையில் வெப்பநிலை அதிகரித்துள்ளதை மற்ற நாடுகளைவிட சிங்கப்பூரின் வானிலை தெளிவாகக் காட்டுகிறது,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கிலைமட் சென்டரலின் இணை ஆய்வாளர் ஜோசஃப் கிகுவேரே தெரிவித்தார்.
அதிக வெப்பநிலை, அதாவது 33 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகும் நாள்களில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு தேசிய சுற்றுப்புற வாரியம் ஆலோசனைக் குறிப்புகளை வெளியிடும்.
இந்த அணுகுமுறை 2023ஆம் ஆண்டிலிருந்து நடப்பில் உள்ளது.
உலகளாவிய நிலையில், 1991ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 2024ஆம் ஆண்டில் அபாயகரமான வெப்ப நாள்களின் எண்ணிக்கை, வழக்கநிலையைவிட 41 நாள்கள் அதிகம் என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
2024ஆம் ஆண்டுதான் ஆக வெப்பமான ஆண்டு என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாண்டில் சராசரி உலகளாவிய வெப்பநிலை முதன்முறையாக 1.5 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.