குப்பை மறுசுழற்சியை அதிகரிப்பது குறித்து சிங்கப்பூர் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
விதிமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவருவதன்மூலம் குப்பைகளில் உள்ள தூய்மையான, மறுசுழற்சிப் பொருள்களைப் பிரித்தெடுக்கும் வேலை எளிதாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
மறுசுழற்சிக் குப்பைகள் தொடர்பாகச் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்கான மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி பதிலளித்தார்.
“அண்மையில் அறிவிக்கப்பட்ட சிங்கப்பூரின் ‘2019 கழிவில்லாப் பெருந்திட்டம்’ மறுஆய்வின் ஒரு பகுதியாக வகைப்படுத்தப்பட்ட மறுசுழற்சி முறைகளைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது,” என்று மூத்த துணை அமைச்சர் ஜனில் கூறினார்.
பெருந்திட்டத்தின்படி, 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மறுசுழற்சி விகிதத்தை 70 விழுக்காடாக உயர்த்த இலக்கு வகுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு குடியிருப்பாளர் அன்றாடம் போடும் கழிவுகளின் அளவை 30 விழுக்காடு குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போதைய மறுசுழற்சி விகிதங்கள் மந்தமாகவே உள்ளன. 2019ஆம் ஆண்டு 59 விழுக்காடாக இருந்த அவ்விகிதம் 2025ஆம் ஆண்டில் 52 விழுக்காடு குறைந்தது.
இதுதொடர்பான மறுஆய்வு 2027ஆம் ஆண்டில் நிறைவடைய உள்ள நிலையில், பெருந்திட்டத்தின் இலக்குகளை மாற்றியமைக்க வேண்டுமா என்பதும் ஆராயப்படலாம்.
மேலும், தூய்மையான, குறைவான மாசுபாட்டைக் கொண்ட மறுசுழற்சிப் பொருள்களைப் பெறுவதன்மூலம் மறுசுழற்சியின் பொருளியல் நிலையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதையும் விளங்கிக்கொள்ள உதவியாக இருக்கும்.
மறுஆய்வு குறித்து விரிவாகப் பேசிய திரு ஜனில், மாறிவரும் கழிவு மற்றும் மறுசுழற்சிச் சூழலைக் கருத்தில் கொண்டு அந்த இலக்குகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்றார்.
அதிகரித்து வரும் போக்குவரத்து, எரிசக்திச் செலவுகள், மறுசுழற்சிப் பொருள்களுக்கான ஏற்றுமதிச் சந்தைகளின் கடுமையான விதிமுறைகள் ஆகியவை சிங்கப்பூரின் மறுசுழற்சி விகிதங்களைப் பாதித்துள்ள சவால்கள் என்று திரு ஜனில் சுட்டிக்காட்டினார்.

