நீடித்த நிலைத்தன்மை அம்சம் கொண்ட எரிசக்திக்கு மாறும் இலக்கை அடைய நம்பிக்கை தரும் எல்லா வகையான பாதைகளையும் சிங்கப்பூர் ஆராயவேண்டும் என்று எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான டான் சீ லெங் கூறியுள்ளார்.
செயல்பாட்டில் இருக்கும் முறைகளிலிருந்து புதிதாகத் தலைதூக்கியிருக்கும் அம்சங்கள் வரை ஆராயப்படவேண்டும் என்று டாக்டர் டான் திங்கட்கிழமை (அக்டோபர் 27) சுட்டினார்.
அந்த வகையில், புதுப்பிக்கத்தக்க எரிபொருள் எனக் கூறப்படும் பையோமீத்தேன் (biomethan) பயன்பாட்டைச் சிங்கப்பூர் ஆராயவுள்ளது. எரிசக்தித் துறையில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.
அதோடு, அணுசக்தி மூலம் எரிசக்தி உற்பத்தி பற்றி அத்துறை சார்ந்த நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் சிங்கப்பூர் எண்ணம் கொண்டுள்ளது. புதிய பங்காளித்துவங்களைச் செய்துகொள்வதன் மூலம் அவ்வாறு செய்ய சிங்கப்பூர் எண்ணம் கொண்டுள்ளதாக டாக்டர் டான் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரம் எனும் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் பேசினார். இந்த மாநாடு, ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே உள்ளூர் பயன்பாட்டுக்காக சிங்கப்பூர் முடிந்தவரை சூரியசக்தியை உபயோகித்து வருகிறது.
மேலும், வெளிநாடுகளில் நடப்பில் இருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் திட்டங்கள்மூலம் சிங்கப்பூரில் மின்சாரம் விநியோகிப்பதன் சாத்தியமும் ஆராயப்படுகிறது என்று சேண்ட்ஸ் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் டான் விவரித்தார்.
அதேவேளை, மாற்று எரிபொருள் முறைகளைப் பொறுத்தவரை சிங்கப்பூரில் நிலவரம் சாதகமாக இல்லை. அதனால் புதிதாக உருவெடுத்துவரும் முறைகளையும் சிங்கப்பூர் ஆராயவேண்டும் என்று அமைச்சர் டான் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
பருவநிலை தொடர்பான கவலைகள், எரிபொருள் பாதுகாப்பு, போட்டித்தன்மை மிகுந்த சூழலுக்கு ஏற்ப விலையை நிர்ணயிப்பது ஆகிய அம்சங்களில் சமமான போக்கைக் கடைப்பிடிக்க இது அவசியம் என்றார் டாக்டர் டான்.
“நாம் அடைய விரும்பும் வருங்காலத்தை அமைத்துக்கொள்ள நீடித்த நிலைத்தன்மை அம்சம் கொண்ட பலவகையான எரிபொருள் முறைகளை நாடவேண்டும்,” என்றார் டாக்டர் டான்.
“ஒரே தீர்வு போதுமானதாக இருக்க அதிக வாய்ப்பில்லை. காரணம், கரிமப் பயன்பாட்டைக் குறைக்க, எல்லா சூழல்களுக்கும் ஒரே தீர்வு போதுமானதாக இருக்காது,” என்றும் அவர் விளக்கமளித்தார்.

