மனநலச் சுகாதார ஆதரவுக்கான தேவை அதிகரித்துவரும் நிலையில், சிங்கப்பூரில் உளவியல் நிபுணர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நிபுணத்துவச் சங்கம் ஒன்று தெரிவித்துள்ளது.
மனநலம் தொடர்பில் விழிப்புணர்வும் அண்மை ஆண்டுகளில் நிபுணத்துவ உதவி நாடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவரும் நிலையில், அந்தக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், புதிய உளவியல் நிபுணர்களுக்குப் பயிற்சி வழங்குவது அதற்கான உடனடித் தீர்வு அல்ல என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். ஊழியரணியை விரிவுபடுத்துவதில் நீண்ட கல்விப் பாதைகள், குறைவான உள்ளூர்ப் பயிற்சி இடங்கள் ஆகியவை முக்கியச் சவால்களாக உள்ளன.
தகுதிவாய்ந்த உளவியல் நிபுணராவதற்குக் கிட்டத்தட்ட ஏழாண்டுகள் எடுக்கிறது. பட்டப்படிப்புக்குப் பிந்தைய மேற்கல்விக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர், பட்டதாரிகள் கண்காணிக்கப்பட்ட கற்றல் அனுபவத்தைப் பெறவேண்டும்.
அதற்கான செலவுகள், குறிப்பாக, உள்ளூரில் குறைவான தெரிவுகள் இருப்பதால், வெளிநாடுகளில் பயில விரும்பும் மாணவர்களுக்கு ஒரு பெரிய தடையாக அமையலாம்.
தகுதிபெறும் உளவியல் நிபுணராகப் பணியாற்ற முடிவெடுப்பது என்பது, தாங்கள் மட்டுமன்றி தங்கள் குடும்பத்தாரும் நிறைய தியாகங்களைச் செய்யவேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதாகும் என்று சிங்கப்பூர் உளவியல் சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் பர்லின் இங் கூறினார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், வழக்கமான ஏழாண்டுகளுக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளிலேயே மாணவர்கள் தங்கள் பயிற்சியை முடிப்பதற்கு வகைசெய்யும் புதிய பாதையை அண்மையில் தொடங்கியது.
இருப்பினும், மாணவர்கள் குறிப்பிட்ட சில பயிற்சி வகுப்புகளுக்குக் கட்டாயமாகச் செல்லவேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
அந்தத் துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், குறிப்பிட்ட சில பிரிவுகளில் உள்ள உளவியல் நிபுணர்கள் சிங்கப்பூரில் செயல்படுவதற்குப் பதிவு செய்துகொள்ளவேண்டியது கட்டாயமாகும்.
நோயாளிகளுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வது, மனநலச் சேவைகளை எளிதில் பெறுவது போன்ற நிபுணத்துவத் தரங்களை மேம்படுத்துவதே அதன் நோக்கம்.

