செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தயாரிப்புகளுக்கான உலகளாவிய தேவை காரணமாக, சிங்கப்பூரின் உற்பத்தித் துறை ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக வளர்ச்சியடைந்துள்ளது.
சிங்கப்பூர் கொள்முதல் நிர்வாகிகள் (பிஎம்ஐ) குறியீடு மார்ச் மாதத்தில் இருந்த 50.5 புள்ளிகளிலிருந்து ஏப்ரலில் 50.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது பிப்ரவரி 2025க்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த அளவாகும். 50 புள்ளிகளுக்கு மேல் என்பது வளர்ச்சியைக் குறிக்கும்.
உற்பத்தித் துறையில் 40 விழுக்காடு பங்களிக்கும் மின்னணுவியல் துறை, தொடர்ந்து 11வது மாதமாக 51.7 புள்ளிகளுடன் வலுவான வளர்ச்சி கண்டுள்ளது. உலகளாவிய குறைகடத்தித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இதற்கு முக்கியக் காரணமாகும்.
எனினும், ஈரான் போர், ஹோர்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக விநியோகச் சங்கிலியில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, குறைகடத்திகள் தயாரிக்கத் தேவைப்படும் ஹீலியம் வாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, எரிசக்தி விலையேற்றம் ஆகியவை உற்பத்திச் செலவை அதிகரித்துள்ளன. ஹோர்முஸ் முடக்கத்தால் பெட்ரோலிய ரசாயனம், பிளாஸ்டிக் போன்ற மூலப்பொருட்களின் வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய தருவிப்பு ஆணைகள் அதிகரித்திருப்பது சாதகமான அறிகுறியாக இருந்தாலும், போர் நீடித்தால் அதன் பணவீக்க விளைவுகள் உற்பத்தித் துறையை அழுத்தத்திற்கு உள்ளாக்கக்கூடும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
விநியோகத் தாமதங்களைத் தவிர்க்க, நிறுவனங்கள் முன்கூட்டியே மூலப்பொருள்களை இறக்குமதி செய்து கையிருப்பில் வைப்பதாகப் பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
எதிர்கால வணிக வளர்ச்சி குறித்து நிறுவனங்கள் நம்பிக்கையுடன் இருந்தாலும், எரிசக்தி விலை உயர்வும் விநியோகச் சங்கிலித் தடைகளும் மூன்றாம் காலாண்டில் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

