தொடர்ந்து இரண்டு மாதங்களாகச் சுருங்கிவந்த சிங்கப்பூரின் உற்பத்தித் திறன் கடந்த ஜூன் மாதம் சற்று மேம்பட்டது.
எனினும், அமெரிக்க வரிவிதிப்பு நடப்புக்கு வரவிருக்கும் நாள் நெருங்கும் வேளையில் நிலையற்ற சூழல் தொடர்கிறது. இம்மாதம் ஒன்பதாம் தேதி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு நடப்புக்கு வரவுள்ளது.
உற்பத்தித் துறையின் செயல்பாட்டைக் கணக்கிடும் பிஎம்ஐ குறியீடு கடந்த மே மாதம் 49.7ஆகப் பதிவானது. அக்குறியீடு, ஜூனில் 50ஆகப் பதிவானது.
“இவ்வாண்டு பிற்பாதிக்குள் நுழையும்போது உற்பத்தித் துறை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேவேளை, உலக வர்த்தகச் சூழலில் நிலையற்ற தன்மை தொடர்கிறது,” என்று சிங்கப்பூர் கொள்முதல், பொருள் நிர்வாகக் கழகத்தின் (எஸ்ஐபிஎம்எம்) நிர்வாக இயக்குநர் ஸ்டீஃபன் போ கூறினார். பிஎம்ஐ குறியீடு அதிகரித்தாலும் உள்ளூர் உற்பத்தி நிறுவனங்கள், மாறிவரும் உலக வர்த்தகக் கொள்கை, வரி ஆகியவற்றினால் கவலை கொண்டுள்ளதாகவும் திரு போ சுட்டினார். அதனால் விநியோகச் சங்கிலி சீரற்று இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எஸ்ஐபிஎம்எம், பல்வேறு கருத்தாய்வுகளைக் கொண்டு மாதந்தோறும் பிஎம்ஐ குறியீட்டை வரையும் நிபுணத்துவ அமைப்பாகும்.
இறக்குமதி நடவடிக்கைகள் கூடுதல் வேகமாக வளர்ச்சியடைந்ததாகவும் பொருள் வாங்கியோருக்கு அவற்றை விநியோகம் செய்வது, முழுத் தயார்நிலையில் உள்ள பொருள்கள் (supplier deliveries, finished goods) உள்ளிட்டவற்றில் வளர்ச்சி மந்தமாக இருந்ததாகவும் எஸ்ஐபிஎம்எம் தெரிவித்தது. மேலும், இரண்டு மாதங்களாகச் சுருங்கிவந்த மின்சாரப் பொருள் துறையில் பிஎம்ஐ குறியீடு மாத அடிப்படையில் 0.2 புள்ளிகள் அதிகரித்து 50.1ஆகப் பதிவானது.
ஜூன் மாதம் பதிவான பிஎம்ஐ குறியீடு, கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க வரிவிதிப்பு அறிவிக்கப்பட்ட பிறகு வர்த்தகச் சூழல் ஓரளவு சீராகியிருப்பதைக் காட்டுவதாக ஓசிபிசி வங்கியின் உலகச் சந்தைகள் ஆய்வு, உத்திப் பிரிவின் தலைவரும் மூத்த பொருளியல் வல்லுநருமான செலீனா லிங் குறிப்பிட்டார். எனினும், வரிவிதிப்பை முன்னிட்டு தொடக்கத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தாக்கம் இதோடு முழுமையாக உணரப்பட்டிருக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார்.